மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி, அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதி வாங்கப்பட்டதாகவும் கூறினார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய மா. சுப்பிரமணியன், "இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டது. அனுமதி கிடைக்கப்பெற்ற மாநிலங்களில் மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிவுற்றுள்ளன.
ஆனால் தமிழ்நாட்டில் ஒரே ஒரு செங்கல் மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்தச் செங்கல்லை உதயநிதி எடுத்து வந்துவிட்டார்" எனக் கூறினார்.
வாக்குறுதி என்னாச்சு
அடுத்துப் பேசிய கோவிந்தசாமி, "நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டம் கொண்டுவரப்பட்டு தேர்வு நடத்தப்படாது என்று திமுக கூறியிருந்த வாக்குறுதி என்னவாயிற்று" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த மா. சுப்பிரமணியன், காங்கிரஸ் ஆட்சியில் நீட் கொண்டுவரப்பட்டபோது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி நீட்டுக்கு விலக்குப் பெற்றார்.
நீட் வந்தது எடப்பாடி ஆட்சியில் தான்
கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சராக இருக்கும்வரை, நீட் தமிழ்நாட்டில் வரவில்லை. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது" எனக் கூறினார்.
அப்போது காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணி எழுந்து பேச முயற்சித்தார். இதனால் காங்கிரஸ், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கிடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பேசிய விஜயதரணி, "காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது நீட் கொண்டுவரப்பட்டாலும், விரும்புகின்ற மாநிலங்கள் தேர்வை நடத்தலாம் என்று கூறப்பட்டது" எனச் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புக - அண்ணாமலை