சென்னை: சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. சைதாப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மேற்கு மாம்பலம் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 606 மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விலையில்லா மிதிவண்டி வழங்கினார்.
அதன் பின்னர் பேசும் போது, “1995 ஆம் ஆண்டு வரை மாநகராட்சி பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் முகம் சுளிக்கும் அளவுக்கு 50 முதல் 55 சதவீதம் என்று தான் இருந்தது. இன்றைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அன்றைய மேயராக பொறுப்பேற்ற பின் கல்வி வளர்ச்சிக்கு பல செயல்கள் ஆற்றினார். அடுத்தடுத்த ஆண்டுகளில் 90 முதல் 96% வரை கல்வி தேர்ச்சி விகிதம் உயர்ந்தது.
இந்த மாற்றங்களுக்கு கல்வித் துறை கட்டமைப்பு மற்றும் பள்ளியில் ஏற்படுத்தி உள்ள புதிய வசதிகளும் காரணம். சென்னையில் எந்த தனியார் பள்ளியிலும் இந்த பள்ளியில் உள்ள கணினி ஆய்வகம் போன்று இல்லை என்று சொல்லலாம். அதே போல் சென்னையில் வேறு எந்த பள்ளியிலும் இல்லாத வகையில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மாநகராட்சி பள்ளியில் படித்து இப்போது நல்ல நிலையில் இருக்கும் முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்து Alumni meet நடத்தலாம் என்று கல்வி அலுவலர் யோசனை சொன்னார். மாநகராட்சி பள்ளியில் படித்த மாணவர்கள் சிறந்த நிலையில் இருக்கின்றனர் என்று மற்றவர்கள் தெரிந்து கொள்ள இதை விட நல்ல வாய்ப்பு உள்ளதா என்று தெரியாது. இந்த மிதிவண்டி தூரத்தை மட்டும் கடக்க உதவும் கருவி மட்டுமில்லை.
உடல் நலத்தை பாதுகாக்க உதவும் வகையிலும் தான் வழங்குகிறோம். இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை கடந்த 10 ஆம் தேதி விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் மூலம் சென்னையில் மட்டும் 22 ஆயிரத்து 771 மாணவர்கள் பயன் பெறுகின்றனர். 9 ஆயிரத்து 711 மாணவர்களும், 13 ஆயிரத்து 60 பேர் மாணவிகளும் பயன்பெற உள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகம்.
இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். 1956 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டி சங்கரலிங்கனார் 72 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்து போனார். 1961 மற்றும் 1962 ஆண்டுகளில் போராட்டங்கள் நடந்தது. அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோற்றுப் போனது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அண்ணா பதவி ஏற்றப் பின்னர், 1967ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. இன்றைய நாளில் உங்களை சந்தித்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி” என்றுக் கூறினார். முன்னதாக, இன்று என்ன சிறப்பான நாள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாணவிகள் மத்தியில் கேள்வி எழுப்பினார். அப்போது தமிழ்நாடு நாள் என்று சரியாக பதிலளித்த மாணவிக்கு கல்லூரி படிப்பில் முதலாமாண்டு செலவை ஏற்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: Ponmudi: அமைச்சர் பொன்முடியுடன் முதலமைச்சர் தொலைபேசியில் பேச்சு!