சென்னை: பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வேலூர் மாவட்டம் மண்டல அளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை செயலாளர், பள்ளி கல்வித்துறை ஆணையர், உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளனர்.
அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள் ,முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும்.
பள்ளியில் எந்த நிகழ்வும் நடந்தாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலர் நேரடி கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் மாணவர்கள் அடித்துக் கொள்ளுதல், சாலை விபத்து, உள்ளிட்ட பிற அசம்பாவித சம்பவம் நடைபெற்றால் உடனடியாக முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலரின் அனுமதியின் பேரில் தான் பத்திரிக்கை செய்தி தர வேண்டும்.
குடிநீர் கழிப்பறை, ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்கள் எண்ணிக்கை, ஆசிரியர்கள் காலி பணியிட விபரம், என எதையும் பத்திரிகையாளர்களுக்கு முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெறாமல் தெரிவிக்கக் கூடாது. பேருந்தில் வரும் மாணவர்கள் பேருந்தின் மேல் கூரையில் அமர்ந்து கொண்டு வருவதை தவிர்க்க காலை இறை வணக்ககூட்டத்தில் தக்க அறிவுரை வழங்க வேண்டும்.
வகுப்பறை பற்றாக்குறை காரணமாகவோ அல்லது இதர காரணத்தினாலோ வெளியில் மரத்தடியில் வகுப்பு நடத்தக் கூடாது. மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய சத்துணவை தலைமை ஆசிரியரோ அல்லது சிறப்பு ஆசிரியரோ நேரில் ஆய்வு செய்து தரமாகவும் சுகாதார முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். முட்டை நல்ல முறையில் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்த பின்னர் தான் வழங்கப்பட வேண்டும்.
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்னஞ்சலை திறந்து பார்க்க வேண்டும். மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் அனைத்து கடிதங்களையும் காலை 10 மணி முதல் பள்ளி வேலை முடியும் வரை கண்காணிக்கப்பட்டு , படித்து பார்த்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பள்ளி தலைமையாசிரியர் பள்ளி வளாகம் கழிப்பறை மற்றும் வகுப்பறை ஆகியன தூய்மையாக உள்ளதா என்பதை சரி பார்த்து அதனை பராமரிக்க வேண்டும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், பிற மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை சுயநிதி வகுப்பிற்கு பாடம் போதிக்க அனுமதிக்க கூடாது. ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறையில் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும் . அலுவலர்கள் ஆய்வு செய்யும் போது செல்போன் பேசிக் கொண்டிருந்தால் அந்த ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் .
பள்ளியில் படிக்கும் மாணவர்களை எக்காரணத்தை கொண்டும் ஆசிரியர்கள் தன்னுடைய சொந்த வேலைக்கு வெளியில் அனுப்பக்கூடாது.
பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியர் பொறுப்பு ஏற்பதுடன் மாணவரின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளித்திட வேண்டும்.
மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் தமிழாசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களுக்கு வாய்ப்பாடு பயிற்சி அளித்திட வேண்டும். பழுதான கட்டிடத்தில் மாணவர்களை அமர வைக்க கூடாது. பள்ளியின் வளர்ச்சியிலும் மாணவர்களின் வளர்ச்சியிலும் அனைத்து ஆசிரியர்களும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.
மாணவர்கள் மோதிரம், செயின், கையில் ஒயர், போன்றவற்றை கண்டிப்பாக அணிந்து வரக்கூடாது. மாணவர்கள் அணிந்து வந்தால் அவர்களின் பெற்றோரை வர சொல்லி விவரத்தை தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட 77 வழிகாட்டும் நெறிமுறைகளை பள்ளி கல்வித்துறை அதிரடியாக பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: கொசுவை கட்டுப்படுத்த புகைப்பரப்பும் பணி - சென்னை மாநகராட்சி திட்டம்