திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரத்தைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன்(46). திருமுல்லைவாயல் தலைமை காவலராக பணிபுரியும் இவர், கடந்த 18ஆம் தேதி அண்ணனூர் பகுதியில் நகை குற்றவாளியை பிடிக்க இருசக்கர வாகனத்தில் ஊர்க்காவல் படை காவலர் கிருபாகரன் என்பவருடன் சென்றார்.
வாகனத்தை ஓட்டிச்சென்ற சவுந்தரராஜன் அண்ணனூர் ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயிலை கண்டு செய்வதறியாது திணறிய நிலையில் அங்கேயே நின்றுவிட்டார். பின்னால் அமர்ந்திருந்த கிருபாகரன் துரிதமாகச் செயல்பட்டு, நொடிப் பொழுதில் அவரை இழுத்து காப்பாற்றினார்.
இதில், சவுந்தரராஜன் சிறிது காயங்களுடன் உயிர்தப்பினார். ரயிலில் சிக்கிய இருசக்கர வாகனம் சுக்குநூறானது. காயம்பட்ட சவுந்தரராஜன் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், துரிதமாகச் செயல்பட்டு தலைமை காவலரின் உயிரைக் காப்பாற்றிய ஊர் காவல் படை காவலர் கிருபாகரனை அம்பத்தூர் துணை காவல் ஆணையர் அழைத்து பாராட்டியதோடு அவருக்கு ரொக்க பரிசும் கொடுத்து ஊக்கப்படுத்தினார்.
இதையும் படிங்க: பணியில் இருந்த காவலரை தாக்கிய இருவர் கைது!