சென்னை: இயக்குநர் யு.ஆர். ஜமீல் இயக்கத்தில் நடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் மஹா திரைப்படம் உருவாகியுள்ளது. இது ஹன்சிகாவின் 50 வது படமாக உருவாகியுள்ளது. சிம்பு இந்தப் படத்தில் முக்கியமான சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் மஹா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஹன்சிகா, ஆரி, ஆர்கே.செல்வமணி, கே.ராஜன், இயக்குனர் சீனு ராமசாமி, லக்ஷ்மன், நந்தா பெரியசாமி, விஜய் சந்தர், கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் சீனு ராமசாமி இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது ”பெண் குழந்தைகளுக்கு குட் டச் மற்றும் பேட் டச் ஆகியவற்றைக் கற்றுத்தர வேண்டிய கட்டாயத்தில் இப்படம் வந்துள்ளது”. ஹன்சிகாவுக்கு என்னுடைய பாராட்டுக்கள். இன்று ஒவ்வொரு படமும் புதிய படம்தான். சினிமாவில் ஒருவரின் சிறு தள்ளாட்டத்தையும் கொண்டாட தயாராக இருக்கிறார்கள் என தெரிவித்தார்.
சிம்பு 40 நிமிடங்கள் வருவார்: குணச் சித்திர நடிகரும் காமெடியனுமான தம்பி ராமையா பேசும் போது இக்கதையில் நடிக்க ஒப்புக்கொண்ட ஹன்சிகாவுக்கு நன்றி. இப்படத்தில் அருமையான நடிப்பை வழங்கியுள்ளார். இப்படத்தில் சிம்பு 40 நிமிடங்கள் வருவார் எனக் குறிப்பிட்டார். இதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இதையடுத்து பேசிய ஆரி பேசும்போது சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தில் நிறைய நடிகைகள் நடிக்க மறுத்தபோது ஹன்சிகா நடித்தார். அதேபோல் உதயநிதி நடித்த முதல் படத்திலும் எந்தவித மறுப்பும் இன்றி நடித்தார். இன்று இரண்டு பேரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். ட்ரெய்லர் மிகவும் நன்றாக உள்ளது என்ரார்.
சிம்புவிடம் கோரிக்கை: மஹா படத்தின் ஆர்கே.செல்வமணி இப்படத்திற்கு ஒரு பிரச்சனை வரும்போது ஹன்சிகாவின் அம்மா எனக்கு போன் செய்து இப்படத்தின் பிரச்சினையை முடித்துக்கொடுக்குமாறு கேட்டார். தான் நடித்த படங்களை விளம்பரப்படுத்தும் பொறுப்பு நடிகர்களுக்கு உண்டு. சிம்பு மிகச்சிறந்த நடிகர். தயவுசெய்து சரியான நேரத்தில் உங்களுடைய திறமையைக் கொடுத்து தயாரிப்பாளர்களை வாழ வைக்க வேண்டும் என்று கோரிக்கையை மேடையில் அனைவரின் முன்பும் வைத்தார்.
நண்பர் சிம்புவுக்கு நன்றி: இறுதியாக பேசிய நடிகை ஹன்சிகா மஹா திரைப்படத்தின் வாய்ப்பு எனக்கு வந்தபோது உனது 50வது படமாக இதுதான் இருக்க வேண்டும் என்று எனது அம்மா கூறினார். என் அம்மாவுக்கு நன்றி. இப்படம் எனக்கு புதிய அத்தியாயம். எனக்கு ஸ்பெஷலான படமும் கூட. இந்த கதையை எனக்குக் கொண்டு வந்த இயக்குநருக்கு நன்றி. மேலும் ஒரே ஒரு போன் காலில் கேட்டதுமே ஒப்புக்கொண்டு நடித்துக்கொடுத்த நண்பர் சிம்புக்கு எனது நன்றி எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓடிடி தளத்தில் வெளியாகும் ’வீட்ல விசேஷம்’