சென்னை: ஜி.மோகன் இயக்கத்தில் நடிகர்கள் ரிஷி ரிச்சர்ட், கௌதம் மேனன், தர்ஷா குப்தா, ராதா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ருத்ர தாண்டவம்' படம் அக்டோபர் ஒன்றாம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் இந்த திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகர் ராதா ரவி உள்ளிட்டோர் பார்த்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா பேசுகையில், "உண்மையான ருத்ரதாண்டவத்தை இந்த படத்தில் பார்த்தோம். சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல கல்வி மதிப்பு. சமூக, சட்ட ரீதியாக 18 வயதுக்கு முன்பாக வருவது காதல் இல்லை. அது ஒரு ஈர்ப்பு. படிக்கும் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்; காதலில் இல்லை. 2 பெண் குழந்தைகளின் தகப்பனாக இதுகுறித்து எனக்குப் பல கவலை இருக்கிறது. இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு முக்குக்கு முக்கு முக்கோணம் விளம்பரத்தைப் பார்த்தோம்.
ஆனால், இன்று செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்து வருகின்றன. காரணம் குடியும் , போதையும். மதம் மாறியவர் இந்து மத ஜாதி பெயரைப் பயன்படுத்தக் கூடாது. மனமாற்றம் இல்லாத மதமாற்றம் ஏமாற்றம்தான்.
படத்தில் வரும் ஜோசப் கதாபாத்திரம் கிறிஸ்தவ மதத்தைப் பெருமைப்படுத்தியுள்ளதே தவிர இழிவுபடுத்தவில்லை. சரக்கு, மிடுக்கு பேச்சு மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஜாதி பிரச்னையாக மாற்றுபவர்களை இந்த படம் எச்சரித்துள்ளது.
'இந்து' இல்லாமல் தமிழ் இல்லை. சீமான் அம்மா தமிழச்சி இல்லை அவர் மலையாளி. என்னை பிகாரி என்கிறார்கள். நான் பச்சை தஞ்சாவூரான்" என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் வீட்டின் முன் தீக்குளித்த நபர் - கடம்பூர் ராஜு மீது பரபரப்பு குற்றச்சாட்டு