கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் என்பவரை, காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தனர். இந்த விவகாரம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவிலும் எதிரொலித்தது. மிக முக்கிய வழக்கு என்பதால் துரிதமாகச் செயல்பட்ட தமிழ்நாடு காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.
பயங்கரவாதிகளை இயக்கிய தலைவன் யார்? - கியூ பிரிவு காவல் துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை
மேலும், காவலரைக் கொலைசெய்துவிட்டு கேரள வனப்பகுதிக்குள் குற்றவாளிகள் தப்பிச் சென்றதாகவும் கூறப்பட்டது. தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநில காவல் துறையும் தவுபீக் என்பவரையும் அப்துல் சமீம் என்பவரையும் சந்தேகத்தின்பேரில் தேடிவந்தனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரையும் கர்நாடகா காவல் துறையினர் பெங்களூருவில் கைதுசெய்தனர். பின்னர், தமிழ்நாடு காவல் துறையினரிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். இருவரையும் விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதேபோல் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், வில்சனைக் கொலைசெய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இருக்கும் இடத்தைக் கேட்டறிந்த காவல் துறையினர், அதனை இன்று கண்டெடுத்துள்ளனர்.
அந்தத் தகவலின்படி கேரள மாநிலம் எர்ணாகுளத்திலுள்ள கழிவுநீர் ஓடையில் இருவரும் வீசிச்சென்ற துப்பாக்கியை காவல் துறையினர் இன்று கண்டறிந்தனர். இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக இத்துப்பாக்கி பார்க்கப்படுகிறது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்ற தமிழ்நாடு அரசு பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை சப்ளை செய்தவர் கைது!