சென்னை: சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (ஜன.28) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது யுவராஜ் உள்ளிட்ட மேல்முறையீட்டு மனுதாரர்கள் தரப்பில், “எங்களுக்கு எதிராக திரட்டப்பட்டதாக குறிப்பிடும், ஆதாரங்களை காவல் துறை உடனடியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.
கோகுல்ராஜின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட பிறகும், பயன்பாட்டில் இருந்தது. எங்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களையும், அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் வீடியோ பதிவான ஹார்ட் டிஸ்கையும் நடைமுறைகளை பின்பற்றாமல் காவல்துறை கையாண்டுள்ளது.
ஹார்ட் டிஸ்க்கில் இருந்த பதிவுகளை யார் கையாள்வது? யார் எடுக்க சொன்னது? யார் எடிட் செய்வது? யார் அழித்தது தொடர்பான விவரங்களை காவல் துறை முழுமையாக விசாரிக்கவில்லை. சிசிடிவி கண்காணிப்பாளரிடமும் விசாரணை நடத்தப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள் அமர்வு, “மேல்முறையீட்டு மனுதாரர்கள் தரப்பு குற்றச்சாட்டுகள் குறித்து காவல் துறை தரப்பில் வாதங்களை முன்வைப்பதற்காகவும், குற்றவாளி தங்கள் தரப்பு வாதங்களுக்காகவும் வழக்கின் விசாரணை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு வழக்கு தள்ளி வைக்கப்படுகிறது” என உத்தரவிட்டது.
இதையும் படிங்க: கோகுல் ராஜ் கொலை வழக்கு; திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நீதிபதிகள் ஆய்வு