சென்னை: கிண்டியில் உள்ள ராஜ்பவன் ஆளுநர் மாளிகை முன்பு, கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த கருக்கா வினோத் என்கிற ரவுடியை கைது செய்து கிண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பின்னர், கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின், கருக்கா வினோத்தை கிண்டி போலீசார் மூன்று நாட்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், கருக்கா வினோத் நீட் தேர்வு விலக்கு வேண்டும் மற்றும் நீண்ட நாட்களாக சிறையில் இருப்பவர்களை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து பெட்ரோல் குண்டுகளை வீசியதாக வாக்குமூலம் அளித்தார்.
ஏற்கனவே, சென்னை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு, தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு, மதுபானக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு, உள்ளிட்ட 14 வழக்குகள் கருக்கா வினோத் மீது நிலுவையில் இருப்பது தெரியவந்தது. பின்னர், கருக்கா வினோத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கிண்டி போலீசார் சிறையில் அடைத்தனர்.
தமிழ்நாட்டின் ஆளுநர் மாளிகை முன்பு, பெட்ரோல் குண்டு வீசியதால் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மூன்று பிரிவின் கீழ் ரவுடி கருக்கா வினோத் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிண்டி காவல் நிலையத்திற்கு நேரடியாகச் சென்று ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆனால், கிண்டி போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சில கோப்புகளை சேர்க்க வேண்டும் என்பதால் ஆவணங்களை கொடுப்பதில் காலதாமதம் ஏற்படும் என்று கூறியுள்ளனர்.
இதனால், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆவணங்களை விரைவாக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதினர். அந்த கடிதத்தின் அடிப்படையில், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பான ஆவணங்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் பேரில், கிண்டி போலீசார் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை நேற்று (டிச. 2) இரவு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டதாக கூறி உள்ளனர். இந்த நிலையில் ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் ஆவணங்களை பெற்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: டிச.6ல் கூடுகிறது இந்தியா கூட்டணி! - அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை?