சென்னை: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையையும், ராதா நகர் பிரதான சாலையையும் இணைக்கும் வகையில் ஒரே வழியாக குரோம்பேட்டை ரயில்வே கேட் அமைந்துள்ளது. ராதா நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் ஜிஎஸ்டி சாலைக்கு வருவதற்கும், அதே போல் ஜிஎஸ்டி சாலையில் இருந்து ராதா நகர் செல்பவர்களுக்கும் இந்த ஒரு ரயில்வே கேட்டை மட்டுமே பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குரோம்பேட்டை பகுதியில் நெடுஞ் சாலைத்துறை சார்பாக ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜூலை 24) கான்கிரீட் போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கனரக வாகனத்தில் இருந்து சுரங்கப்பாதைக்கு காண்கிரீட் சென்று கொண்டிருந்த இரும்பு பைப் திடீரென உடைந்ததால், சாலையில் சென்ற நபர்கள் மீது கான்கிரீட் ஜல்லி கற்கள் பீச்சி அடித்தது. இதில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த குரோம்பேட்டை பகுதியைச் சார்ந்த சந்தானம் என்பவருக்கு உடல் முழுவதும் கான்சகிரீட் கற்கள் வேகமாக வீசியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனே சந்தானத்தை மீட்ட பொதுமக்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அந்த வழியாகச் சென்ற மற்றொருவர் மீதும் கான்கிரீட் கலவை பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அவர் முறையாக தடுப்புகள் அமைக்காமல் பாதுகாப்பு இன்றி பணி மேற்கொள்வதாக கூறி சாலை நடுவே அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.
இதனால் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் பேருந்து நிலையத்தில் இருந்து பல்லாவரம் வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த தகவல் அறிந்த போக்குவரத்து மற்றும் குரோம்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சாலை மறியலில் ஈடுபட்ட நபரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் நடந்த இடத்தில், இன்று (ஜூலை 24) பணியினை தொடங்கும் போது நெடுஞ்சாலை துறை ஏ.டி ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்துவிட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தை அடுத்து பொதுமக்களுக்கு இடையூறு இன்றி பணிகளுக்குத் தேவையான தடுப்புகள் அமைத்து பாதுகாப்போடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குரோம்பேட்டை ராதா நகரில் 12 ஆண்டுகளாக நடைபெற்ற சுரங்கப்பாதை பணிகள் இந்த ஆண்டு மே மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அறிவித்த நிலையில் இன்று வரை சுரங்கப்பாதைகான பணிகளில் தாமதம் ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் அவதி படுகின்றனர்.
இதையும் படிங்க: பீஞ்சமந்தை மலை கிராமத்திற்கு புதிய தார் சாலை! விரைவில் மினி பேருந்து இயக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் உறுதி!