சென்னை: பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளது. இந்த பணியிடங்களில் தற்போது தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்துவதற்கான அரசாணை எண் 149, கடந்த அதிமுக ஆட்சியில் 2018ஆம் ஆண்டு போடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடுவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான பணி நியமனத்திற்குரிய போட்டித் தேர்வு எழுத பொது பிரிவினருக்கு 53 வயது எனவும், இதர பிரிவினர்களுக்கு 58 வயது எனவும், வயது வரம்பில் மாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை சமீபத்தில் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் நவம்பர் 1 முதல் 31ஆம் தேதி வரை 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்விற்கு www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கூடுதலாக ஆயிரம் பணியிடங்கள் சேர்க்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், 2,000க்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பும் தனியாக வெளியாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:ஐபிசி 124 என்றால் என்ன? - ஆளுநர் மாளிகை மேற்கோள் காட்டியதற்கான காரணம் என்ன?