மாநிலப் பாடத்திட்டத்தின்கீழ் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டுவருகிறது.
சட்டப்பேரவை உறுப்பினர்களுடனும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொள்கிறார். அதே நேரத்தில் மருத்துவ வல்லுநர் குழுவுடனும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில் 12ஆம் வகுப்புத் தேர்வு குறித்தும், மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் தனது தனிப்பட்ட கருத்துகளை மருத்துவர் ஜி.ஆர். ரவீந்திரநாத் பதிவுசெய்துள்ளார். அவரது பதிவு வருமாறு:
• கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு 12ஆம் வகுப்புத் தேர்வுகளை ரத்துசெய்ய வேண்டும்.
• 12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும்.
• 12ஆம் வகுப்பு மதிப்பெண் தேவை என விரும்புபவர்களுக்கு மட்டும், கரோனா கட்டுக்குள் வந்த பின்னர் உரிய நேரத்தில் தேர்வை நடத்தலாம்.
• அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு 7.5 விழுக்காட்டை மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமின்றி, அனைத்து அரசு, தனியார் பொறியியல், சட்டம், வேளாண்மை, ஆயுஷ், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட தொழிற் கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். இதை நிறைவேற்ற உடனடியாக அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்.
• அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை, நீதியரசர் கலையரசன் குழு பரிந்துரைத்ததுபோல் பத்து விழுக்காடாக உயர்த்த வேண்டும்.
• அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கென்று தனியாக ஐந்து விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
• இந்த ஆண்டு மட்டும் 12ஆம் வகுப்புக்கு மொழிப்பாடத் தேர்வு தேவையில்லை.
• மொழிப் பாடம் அல்லாத மற்ற நான்கு முக்கியப் பாடங்களுக்கும், தொடர்ந்து நான்கு நாள்களில் தேர்வு வைப்பது கரோனா காலத்தில் ஏற்புடையது அல்ல. அது கரோனா பரவலை அதிகப்படுத்தும்.
• அதே நேரத்தில் கலை, அறிவியல், தொழிற்கல்வி, சட்டக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒரு நியாயமான பாரபட்சமற்ற முறைகேடுகளற்ற நடைமுறை வேண்டும். அந்த நடைமுறை கரோனா பரவும் வாய்ப்பை ஏற்படுத்திவிடக் கூடாது.
• அதற்கு மூன்று மணி நேரத்தில், நான்கு பாடத்திற்கும் சேர்த்து நுழைவுத் தேர்வு நடத்திட வேண்டும். தேர்வு மையங்களை மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே வைக்க வேண்டும். இது தேர்வுக்காக ஏற்படும் நெரிசலை குறைக்கும். கரோனா பரவும் வாய்ப்பை குறைக்கும்.
• முதலில் அறிவியல் படிப்புகளுக்கு குறிப்பிட்ட நாளில் தேர்வை நடத்தலாம்.
• பிறகு சில வாரங்கள் கழித்து வேறொரு நாளில் அறிவியல் அல்லாத இதர படிப்புகளுக்கான நான்கு முக்கியப் பாடங்களுக்கு நுழைவுத் தேர்வை நடத்தலாம். இவ்வாறு தனித் தனியாக வெவ்வேறு நாள்களில், மாணவர்களை இரண்டு பிரிவாகப் பிரித்து கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நுழைவுத் தேர்வை நடத்தலாம்.
• பெருந்தொற்று காலத்தில் எளிய தேர்வு முறையாக நுழைவுத் தேர்வே அமையும். அரை நாளில் தேர்வு முடிந்துவிடும். போதிய கால இடைவெளிவிட்டு இரண்டு நாள்கள் மட்டும் நடத்தும் நுழைவுத் தேர்வால் கரோனா தொற்றுப் பரவும் விகிதம் மிகக் குறைவாகவே இருக்கும்.
• நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும். கரோனா குறையும் நேரத்தில் இந்தத் தேர்வை நடத்தலாம். இதுவே கரோனா காலத்தில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் எழும் பிரச்சினைகள், முறைகேடுகளைத் தடுக்கும்.
• கரோனா காலத்தில் சரியாகப் படிக்க முடியாத மாணவர்களுக்கும் அடுத்தடுத்த வாய்ப்புகளை நுழைவுத் தேர்வே வழங்கும்.
• நுழைவுத் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களுக்கான இட ஒதுக்கீடு பயனுள்ளதாக இருக்கும்.
• இந்த ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வை ஒன்றிய அரசு ரத்துசெய்ய வேண்டும். மாநில அரசு நடத்தும் நுழைவுத் தேர்வின் மூலம், அந்தந்த மாநிலங்களில் அமைந்துள்ள தனியார் தொழில் கல்லூரிகளுக்கும், தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கும், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
• மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி இடங்களுக்கு ஒன்றிய அரசு தனது நுழைவுத் தேர்வை திணிக்கக் கூடாது.
• ஏற்கனவே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கு திணிக்கப்பட்டுள்ள, நீட் நுழைவுத் தேர்விலிருந்து மாநிலங்களுக்கு விலக்கு வழங்க வேண்டும்.
• இந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி நடத்தியிருக்க வேண்டிய முதுநிலை மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வை (NEET PG) மத்திய அரசு இதுவரை நடத்தவில்லை. இது ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குப் பிறகு ஒரு மாதம் கால அவகாசம் கொடுத்து அறிவித்துப் பின்னர் தேர்வு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதனால் 50 ஆயிரம் மருத்துவர்கள் நாட்டின் பல்வேறு அரசு, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்வது தாமதிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை வழங்குவதில் அவர்களைப் பயன்படுத்தும் வாய்ப்பு வீணடிக்கப்பட்டிருக்கிறது.
• மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட்டிலிருந்து விலக்கு வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிறைவேற்றி இருந்தால், இன்று தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான சில ஆயிரம் முதுநிலை மருத்துவக்கல்வி இடங்களுக்கான தேர்வை (TN PG ENTRANCE EXAMINATION), ஏற்கனவே நடைமுறையில் இருந்தது போல் தமிழ்நாடு அரசே நடத்தியிருக்கும். இதனால் இந்நேரம் சில ஆயிரம் மருத்துவர்கள் நம் மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பர். இப்பொழுது கரானா நோயாளிகளுக்கு சிகிச்சை செய்து கொண்டு இருந்திருப்பர்.
• கரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் தனது பிடிவாதப் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
• தமிழ்நாடு அரசும் கரோனாவை கருத்தில் கொண்டு, நுழைவுத் தேர்வு அடிப்படையில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டு நடத்திட வேண்டும்.
• உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் உள்ள பிரச்னைகளுக்கு நுழைவுத் தேர்வு மட்டுமே காரணம் அல்ல. உயர்கல்வி இடங்களில் ஏற்பட்டுள்ள கடும் பற்றாக்குறை. உயர்கல்வி கிட்டத்தட்ட முழுவதுமாக தனியார் மயமானது, குறிப்பிட்ட சில இடங்களுக்காக ஏற்படும் கடும் போட்டி, வேலையின்மை, சமூக பொருளாதார பாதுகாப்பின்மை, மருத்துவம் போன்ற சில படிப்புகளை படித்தால் வேலை பொருளாதார பாதுகாப்பு கிட்டும் என்ற நம்பிக்கை போன்ற பல காரணங்கள் உள்ளன.
ஆனால், மாணவர்கள் தாங்கள் விரும்பும் படிப்பில் சேர முடியாததற்கு நுழைவுத் தேர்வு மட்டுமே காரணம் என்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. அதனால் உண்மையான காரணங்களிலிருந்து மக்கள் கவனம் திசை திருப்பப்படுகிறது.
• ஒன்றிய அரசின் தொழிற்கல்வி, உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள சில லட்சம் இடங்களுக்கான அகில இந்திய போட்டித் தேர்வுகளில் தமிழ்நாடு மாணவர்கள் தேர்ச்சி பெற்று சேர முடியாத நிலை தற்போது உள்ளது. தமிழ்நாடு மாணவர்களுக்கு அரசு இலவசமாக நுழைவுத் தேர்வு பயிற்சி வழங்க வேண்டும். அதன் மூலம் ஒன்றிய அரசு நிறுவன இடங்களில் தமிழ்நாடு மாணவர்களும், அதிக அளவில் சேர இயலும். மற்ற மாநில மாணவர்களால் எழுத முடிந்த ஒரு போட்டித் தேர்வை தமிழ்நாடு மாணவர்களுக்கும் பயிற்சி அளித்தால் எழுதி வெற்றி பெற முடியும்.
• பல மாநிலங்கள், பல பாடத் திட்டங்கள், பல வகையான தேர்வு முறைகள், பல வகையான மதிப்பெண் வழங்கும் முறைகள் நம் நாட்டில் உள்ளன.
• அதே நேரத்தில் ஒன்றிய அரசின் பல கல்வி நிறுவனங்களில் சேர எல்லா மாநிலத்தவருக்கும் உரிமை உண்டு. அவற்றில் பல்வேறு மாநிலங்களின் 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்திட இயலாது.
• எனவே எல்லா மாநிலத்தவருக்கும் பொதுவான ஒரு நுழைவுத் தேர்வை நடத்தி, அதன் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்தமுடியும். இதனால் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகள் தவிர்க்க முடியாதவை. அதே நேரத்தில் அத்தேர்வு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர்கல்வி இடங்களுக்கான மாணவர் சேர்க்கை முறை பற்றி, மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும். அதில் ஒன்றிய அரசு தலையிடக் கூடாது.
• மேலும் உயர் கல்வி இடங்களுக்கு கடும் போட்டி உள்ள நிலையில், போட்டித் தேர்வின்றி மாணவர் சேர்க்கையை நடத்த முடியாது. அதே நிலை தான் வேலை வாய்ப்பிலும். இந்த எதார்த்த நிலையை உணர்ந்து நுழைவுத்தேர்வு அச்சத்திலிருந்து (Entrance Exam Phobia) தமிழ்நாடு மீள வேண்டும். இது குறித்த விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்.
இதையும் படிங்க : 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்பு