கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கும்விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை முன்னாள் மேயர் சைதை சா. துரைசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இன்று, நம் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாக நடைபெறுவதற்கும், நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுவருவதற்கும், என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
டெங்கு காய்ச்சல் படுவேகமாகப் பரவிய காலத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மக்களைக் காப்பாற்றுவதற்கு எடுத்த சரித்திரப்புகழ் வாய்ந்த ஒரு நடவடிக்கையை தங்களுக்கு இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.
அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அவரைப் போன்று, கரோனா வைரஸ் கொடூரத்திற்கு தாங்கள் ஒரு முடிவு கட்டி, தமிழ் மருத்துவத்தின் பெருமையை உலகறியச் செய்து, நீங்கள் பேரும், புகழும் அடைய வேண்டும் என்பதற்காகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
சித்த மருத்துவம் என்பது தமிழர்களின் பாரம்பரியச் சொத்து. ’அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம்’ என்பது உலகத்தின் முதல் அறிவியல் அறிஞராகக் கருதப்படும் சித்தர் பொன்மொழி. இந்த உலகமும், மனித உடலும் ஐந்து தன்மைகளையே அடிப்படையாகக் கொண்டது.
அதாவது, நீர், நிலம், நெருப்பு, காற்று ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களால்தான் இந்த உலகமும், மனித உடலும் படைக்கப்பட்டுள்ளது. எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், ரத்தவோட்ட மண்டலம், தசை மண்டலம், மூச்சு மண்டலம் ஆகிய ஐந்து மண்டலங்களால்தான் இந்த உடல் இயங்குகிறது.
சித்த மருத்துவம் சிறந்தது
அதனால், ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதன் அடிப்படையில் மூலிகைகள், செடிகள், பூக்கள், வேர்கள், பட்டைகள் வாயிலாக மனிதருக்கு வரும் அனைத்து நோய்களுக்கும் நம் சித்த வைத்தியத்தின் மூலம் குணப்படுத்த முடியும். ஆனால், நமது பாரம்பரிய மருத்துவ நம்பிக்கையை, நாகரிகம் என்ற பெயரில் காலம் சிதைத்துவிட்டது.
நான் சென்னை பெருநகர மேயராகப் பொறுப்பேற்ற நேரத்தில், டெங்கு காய்ச்சலுக்கு அலோபதியில் மருந்தே இல்லை என்று சொல்லப்பட்டதைக் கேட்டு அதிர்ந்தே போனேன். உடனடியாகப் பல்வேறு சித்த மருத்துவர்களிடம் ஆலோசனைப் பெற்று, அதன் அடிப்படையில், நிலவேம்புக் குடிநீரும், பப்பாளி இலைச் சாறும் சிறந்த தீர்வு என்பதைக் கண்டறிந்தேன்.
இந்தத் தீர்வு சரிதானா என்பதை, சென்னை கிங்ஸ் மருத்துவ நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளச் செய்தேன். அது, டெங்கு நோயைக் குணப்படுத்துவதில் மிகவும் சிறப்பாகச் செயலாற்றுவது உறுதியானதும், அந்த ஆய்வு அறிக்கையோடு அன்றைய சுகாதாரத் துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணனுடன் இணைந்து, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்து தகவல் தெரிவித்தோம்.
இதனைக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த அவர் உடனடியாக நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு இரண்டையும் அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக வழங்க உத்தரவு பிறப்பித்தார்.
சென்னை மற்றும் தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான மருத்துவ முகாம் நடத்தி, நோய்த் தொற்று ஏற்படாமல் தமிழ்நாட்டைக் காப்பாற்றினார். அரசு மருத்துவமனை மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளிலும் நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு பயன்படுத்த உத்தரவிட்டு, அதனைப் பத்திரிகைகளில் முழுப்பக்க செய்தியாகவும் வெளியிட்டு மக்களிடம் மாபெரும் விழிப்புணர்வு உருவாக்கினார்.
எடப்பாடிக்கு அரிய வாய்ப்பு
அதனாலே, டெங்கு நோய் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அப்படியொரு தருணம் மீண்டும் உருவாகியுள்ளது. கரோனா வைரஸ் கிருமிகளுக்கு அலோபதியில் மருந்து இல்லை என்று உலக சுகாதார நிறுவனமே அறிவித்துவிட்டது.
இந்த நேரத்தில், நம் பாரம்பரிய சித்த வைத்தியத்தின் பெருமையை உலகறிய நிலைநாட்டவும், அதன்மூலம் நம் விவசாயத்திற்கும், விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கும் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தவும் ஓர் அரிய வாய்ப்பு தங்களுக்குக் கிடைத்துள்ளது.
ஆம், இப்போது கரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக பல பாரம்பரிய சித்த வைத்தியர்கள் கூறிவருகிறார்கள். அதேபோன்று கரோனாவுக்கு மருந்து, தடுப்பு மருந்துகளைத் தயார் செய்வதற்கான குறிப்புகள் நிறைய மருத்துவர்களிடம் இருக்கின்றன.
ஆகவே, பாரம்பரிய வைத்தியம் மூலம் கரோனா வைரசை வெல்லமுடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அனைத்து மாற்று மருத்துவர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தும் முயற்சியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய மருத்துவமான சித்தா, ஆயுர்வேதம், நேச்சுராபதி, யோகா மருத்துவர்களை மட்டுமின்றி, பிரதமர் நரேந்திர மோடியால் ஆயுஷ் மருத்துவத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஹோமியோபதி, யுனானி மருத்துவர்களையும் கலந்து பேசி போர்க்கால அடிப்படையில் கரோனாவுக்கு மருந்தும், தடுப்பு மருந்துகளும் கண்டறிய வேண்டும்.
அப்படிக் கண்டறிந்த மருந்துகளை, மத்திய, மாநில அரசுகளின் பகுப்பாய்வுக் கூடங்களில் ஆய்வுசெய்து, அதன் உண்மைத்தன்மை உறுதியாகத் தெரிந்ததும், மக்களுக்கு மருந்து கிடைப்பதற்கான நடவடிக்கையில் உடனடியாக இறங்க வேண்டும்.
என்னுடைய அனுபவ ஆய்வு மற்றும் மண்ணின் மரபு சார்ந்த வாழ்க்கை முறையில் இருந்து, நமது பாரம்பரிய சித்த வைத்தியத்தின் மூலம், கரோனா வைரஸ் கிருமிகளை நிச்சயம் அழிக்க முடியும் என்று நம்புகிறேன். அப்படியொரு மருந்தை கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகம் செய்த பெருமை தங்களுக்கும், நம் தமிழகத்திற்கும் கிடைக்க வேண்டும்.
ஒரு விவசாயி தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கும் நேரத்தில் இப்படியொரு சரித்திர சாதனை நிறைவேற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். ஆயுஷ் மருத்துவத்தின் மகிமையை அறிந்தவர் நம் பிரதமர் நரேந்திர மோடி. ஆகவே, அவர் நமது கண்டுபிடிப்புக்கு நிச்சயம் உரிய மதிப்பு கொடுத்து இந்தியா முழுவதும் அறிமுகம் செய்வார்.
சித்தாவின் புகழை உலகறிய வேண்டாமா?
இதன் மூலம் நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தின் பெருமையை உலகறிய பறைசாற்ற முடியும். இதன்மூலம் வரலாற்றின் பக்கங்களில் என்றென்றும் தங்கள் பெயர் நிலைத்திருக்கும். கரோனா வைரசை அழிப்பது மட்டுமின்றி, போதிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நம் பாரம்பரிய மருத்துவ முறையே ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்தவேண்டிய நல்ல தருணம் இது. பாட்டி வைத்தியம், அஞ்சறைப்பெட்டி வைத்தியம், கை வைத்தியம் என்றெல்லாம் அழைக்கப்படும் நம் பாரம்பரிய சித்த வைத்தியத்தை மீட்டெடுக்கும் அரியவாய்ப்பு தங்களுக்குக் கிடைத்திருக்கிறது.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ரேஷன் பொருள்களுக்கு டோக்கன் வழங்கும் தேதி மாற்றம்!