சென்னை: மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டினால் சென்னை மாவட்டத்தில் படித்த 20 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
மேலும், தையல் கலைஞரின் குழந்தையும், மீனவர்களின் குழந்தையும், உணவகத்தில் பணியாற்றும் பணியாளரின் குழந்தையும், தந்தையை இழந்துவிட்டு தாயின் வறுமைக்கு நடுவில் போராடி படிப்பை மட்டுமே கருத்தில் கொண்டு மாணவியும் மருத்துவ படிப்பில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை தேர்வு செய்து சாதனை புரிந்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர்ந்த 20 மாணவர்களுக்கு 25 ஆயிரம் கல்வி உதவித்தொகை மற்றும் மருத்துவ உபகரணங்களை பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், இல்லம் தேடி கல்வி திட்ட அலுவலர் இளம்பகவத், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ஈடிவி பாரத்திடம் பேசிய மாணவிகள், “அரசு ஒதுக்கீட்டினால் தாங்கள் மருத்துவ படிப்பில் சேர முடிந்தது. எங்கள் பெற்றோர், ஆசிரியர்கள் அளித்த உற்சாகம் மற்றும் பயிற்சியின் மூலமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளோம். நீட் தேர்விற்கு மேல்நிலை பாடப்புத்தத்தை ஆர்வமுடன் படித்தால் நிச்சயம் நீட் தேர்வில் சாதிக்க முடியும்” என்றனர்.
அரசு ஒதுக்கீட்டின் மூலம் நீட் தேர்வில் சேர்ந்துள்ள தங்களின் குழந்தைகளை நினைக்கும்போது கூறுவதற்கு வார்த்தை இல்லை, இந்த வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த அரசிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஒத்த வீடியோ.. உடனே சஸ்பெண்டு.. கேரளம்..!!