ராணிப்பேட்டை: நாட்டு பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியை அமைச்சர் ஆர்.காந்தி இன்று (நவ.14) நேரில் சென்று வழங்கினார். கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் கடந்த 12ஆம் தேதி விக்னேஷ் என்பவர் தனது தம்பியின் 4 வயது மகளான நவிஷ்காவை தூக்கி வைத்தபடி நாட்டு பட்டாசு வெடித்து, தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்பொழுது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பட்டசு வெடி விபத்தில் 4 வயது சிறுமி நவிஷ்கா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நவிஷ்காவை தூக்கி வைத்திருந்து சிறுமியின் பெரியப்பா விக்னேஷுக்கு இடது கையில் நான்கு விரல்கள் சிதறிய நிலையில், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த 4 வயது சிறுமியான நவிஷ்காவின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விக்னேஷ் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப்பன் ஆகியோர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்கு இன்று நேரடியாக சென்று, உயிரிழந்த சிறுமியின் புகைப்படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் உயிரிழந்த சிறுமியின் பெற்றோரான ரமேஷ் - அஸ்வினி ஆகியோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து அறிவிக்கப்பட்ட ரூ.3 லட்சம் நிதியினை காசோலையாக வழங்கினர்.
மேலும் அமைச்சர், அவரது சொந்த நிதியான ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை சிறுமியின் பெற்றோரிடம் வழங்கினார். மேலும் காயமடைந்துள்ள விக்னேஷ் என்பவருக்கும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையானது வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு