சென்னை: சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 10) ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் குறித்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், "சட்டமன்ற விதிகளை தளர்த்தி தீர்மானத்தைக் கொண்டு வருகிறீர்கள் என அதிமுகவினர் எங்கள் மீது குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். ஆனால் சட்டமன்ற விதிகளை தளர்த்துவது எப்படி என்பதை கற்றுக் கொடுத்ததே அதிமுகவினர் தான். சட்டமன்ற விதிகளை தளர்த்தி தான் முன்னாள் ஆளுநர் சென்னா ரெட்டி மீது அதிமுகவினர் பாய்ந்தார்கள்.
அதே சட்டமன்ற விதியை இன்று நாங்கள் தளர்த்தும்போது அதிமுகவினர் பத்தினிகளாக மாறிவிட்டனர். கனத்த இதயத்தோடு தான் ஆளுநர் மீது ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றார் முதலமைச்சர். கவர்னர் பதவி என்பது தேவையில்லை என்பதை, எங்கள் கட்சி தோன்றிய போதே பிரகடனப்படுத்தி இருக்கிறது. நாங்கள் எல்லாம் ஆளுங்கட்சியாக வருவோம் என தெரியாத காலத்திலேயே, ஆளுநர் பதவி நாட்டுக்கு தேவை இல்லை என்று தெரிவித்தது திமுக. மாநில அரசாங்கங்களை ஆட்டிப்படைப்பதற்காக மத்திய அரசு ஆளுநர்களை ஒரு ஏஜென்டாக நியமிக்கிறார்கள்.
இந்தியாவில் பல மாநிலங்களில் குழப்பம் ஏற்பட்டதற்கு ஆளுநர்கள் தான் காரணமாக இருந்திருக்கிறார்கள். சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது அவர் நடந்துகொண்ட விதம் குறித்து ஹிந்து நாளிதழ் தலையங்கம் எழுதியது. மாநிலங்களின் நிலைமை தெரியாமல் கூறுகெட்ட தனமாக பேசினால் இப்படித்தான் வரும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைக் கேட்டாவது திருந்தினாரா?; இல்லை. மேற்கு வங்கத்திலே அங்கிருந்த கவர்னர் முதலமைச்சர் மம்தா பானர்ஜியோடு தொடர்ந்து தகராறு செய்து வந்தார். அதன் விளைவாக அவர் ராஜ்யசபா தலைவர் ஆகிவிட்டார்.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருக்கும் ஆர்.என்.ரவி, ஆளுநர் பதவிக்கு மட்டுமல்ல இந்திய குடிமகனாக இருப்பதற்கே தகுதி இல்லாதவர். உங்களுக்கு ஒரு கட்சி கொள்கை இருந்தால் ராஜினாமா செய்து விட்டு செல்லுங்கள். பழைய மு.க.ஸ்டாலினுக்கும், இப்போது இருக்கக்கூடிய மு.க.ஸ்டாலினுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது, பாதி கலைஞர் ஆகவும், பாதி அண்ணாவாகவும் முதலமைச்சர் மாறிவிட்டார். அவரை பார்த்து நானே ஆச்சர்யப்படுகிறேன்.
குடியரசுத் தினத்தை முன்னிட்டு தேநீர் விருந்துக்கு ஆளுநர் மாளிகைக்கு நாங்கள் சென்றபோது அங்கு இந்திய வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு குறும்படம் போட்டார்கள். அதில் தேசத்திற்காக போராடிய பல்வேறு தலைவர்களுடைய காட்சிகள் இருந்தன. ஆனால் காந்தி, நேரு ஆகியோர் அதில் இடம்பெறவில்லை. சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள் பற்றிய படம் போடுகிறீர்கள், காந்தி இல்லாமல் சுதந்திர போராட்டமா? என ஆவேசமாக முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். அதிமுகவினர் அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டியை கல்லை தூக்கி அடித்தார்கள். நாங்கள் அப்படியெல்லாம் அடிக்க மாட்டோம். அண்ணாவால் வளர்க்கப்பட்ட நாங்கள் கண்ணியத்துடன் செயல்படுவோம்” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதவுக்கு ஆளுநர் ஒப்புதல்!