சென்னை: இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று ஆளுநர் உரையாற்றினார். அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை பேரவைத் தலைவர் தனபால் தமிழில் வாசித்தார். இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் சட்டப்பேரவையில் ஆற்றிய உரையின் போது, "தமிழ்நாட்டினை நாட்டிலேயே தலை சிறந்த மாநிலமாக ஆக்கும், இலக்கை அடைவதில் இந்த அரசு வெற்றி நடைபோடுகிறது. கரோனா காலகட்டத்தில் அதனை கட்டுப்படுத்த அயராது உழைத்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் செயல்பாட்டிற்கு பாராட்டுகள்.
கரோனாவை கட்டுப்படுத்துவதிலும், உயிர் இழப்பை குறைப்பதிலும் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாட்டிலேயே பிரத்யேகமாக ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையை கையாண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு.
மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு மூலம் அரசு பள்ளியில் பயின்ற 435 மாணவர்கள் பயனடைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நடவடிக்கை அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய, சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில்வதற்கு ஊக்குவிப்பதோடு, தமிழ்நாட்டின் தொலைதூர கிராமங்களில் பணியாற்ற விரும்பும் மருத்துவர்களையும் உருவாக்கும்.
தமிழ்நாட்டில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தற்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். தற்போது சுகாதாரத்துறை முன்கள பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. வரும் நாள்களில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி வழங்கப்படும்.
2000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கிய முதலமைச்சருக்கு பாராட்டுகள்:
அனைத்து குறை தீர்க்கும் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து "முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம்" செயல்படுத்தப்படும். குறைகளை தொடர்ந்து கண்காணிக்க முகப்பு பக்கமும் உருவாக்கப்படும். குடிமக்கள் வீட்டிருந்தே முதலமைச்சர் உதவி மையத்தின் 1100 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலம் அரசின் சேவைகளை பெற இயலும்.
கரோனா நடவடிக்கைகளுக்காக இதுவரை 13,208 கோடி ரூபாய் சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து தமிழ்நாடு அரசு செலவழித்துள்ளது. பிற மாநிலங்களைப் போலல்லாமல் தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை தாமதப்படுத்த குறைக்கவில்லை. உரிய நேரத்தில் செலவு குறைந்த கடன்களை பெற்றதன் மூலம் நோய்த்தொற்று கடுமையான தாக்கத்திலிருந்து தமிழ்நாட்டு மக்களை அரசு பாதுகாத்துள்ளது.
சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதே இந்திய அரசின் நோக்கம்; அந்த வகையில் கரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவது, நோயின் தடம் அறிதல் என்று கரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறைக்கு பாராட்டுகள்
நிவர், புரெவி புயலினால் பாதிக்கப்பட்ட 16.78 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1715 கோடி நிவாரண உதவி அளித்தன் மூலம் விவசாயிகளின் துயர் துடைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதன் முறையாக இந்திய அரசு வெளியிட்டுள்ள நல் ஆளுமை திறனுக்கான குறியீடு பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது. அதே போல இந்தியா டுடே பத்திரிகை வழங்கியுள்ள ஒட்டுமொத்த செயல் திறன் மிக்க மாநிலம் என்ற விருதையும் பெற்றுள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டுகள்.
அகழ்வாராய்ச்சியில் சங்ககாலப் பண்பாட்டின் செழுமையான தொல் பொருள்கள் கிடைத்துள்ளன. அவை தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டு வரும் உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகத்தில் காட்சிப்படுத்தப்படும்.
நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு ஒருங்கிணைத்ததில் முதலமைச்சருக்கு, பாராட்டுகள்:
வளர்ந்து வரும் துறைகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக மின்சார வாகனம் கொள்கை மற்றும் மின்னணு வன்பொருள் உற்பத்தி கொள்கையை அரசு அறிவித்துள்ளது. இவை இரண்டும் மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் விதமாக புதிய தொழில் கொள்கைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
தொற்று நோய்க்கு பின்னர் இடம் பெற விரும்பும் முதலீட்டாளர்களை ஈர்பதற்கு இந்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அதன் விளைவாக வரலாற்றுச் சாதனையாக 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக, ஒரு லட்சத்தி 721 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய வகையில் 60 ஆயிரத்து 674 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை தமிழ்நாடு அரசு ஈர்த்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் CARE ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் அறிக்கையின் படி இந்திய அளவில் முதலீட்டு திட்டங்களில் அதிக பங்கு 16 விழுக்காடு பெற்று நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தமிழ்நாடு அரசின் அனுமதி இன்றியும் காவிரி மற்றும் அதன் கிளை நதிகளின் குறுக்கே எந்த ஒரு நீர்த் தேக்கத்தையோ அல்லது திசை திருப்பும் அமைப்புகளை கர்நாடக அரசு அமைக்க அனுமதிக்க கூடாது என மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி கர்நாடக அரசால் முன்மொழியப்பட்டுள்ள மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டுமென மத்திய அரசை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
பெரியாறு ஆற்றின் குறிக்கே எந்தவொரு புதிய அணையையும் கட்டுவதற்கு, கேரள மாநிலத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என்றும், 1956 ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகள சட்டத்தில் உள்ள விதி முறைகளின் கீழ் தீர்ப்பாயம் ஒன்றை அமைக்குமாறு மத்திய அரசிடம் நாங்கள் கோரியுள்ளோம் . முல்லை பெரியாறு அணையினை வலுப்படுத்தும் எஞ்சியுள்ள பணிகளை மேற்கொள்ள தேவையான அனுமதிகளை விரைந்து வழங்குமாறு மத்திய அரசையும், கேரள அரசையும் தமிழ்நாடு அரசு கேட்டுக்கொள்கிறது
காவிரி- குண்டாறு திட்டத்தின் முதல் கட்டமாக, காவிரி- தெற்கு வெள்ளாறு இணைப்பின் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அத்திக்கடவு அவிநாசி நீரேற்று பாசனத் திட்டத்திற்கு ஆயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாயை அரசு ஒப்பளிப்பு செய்துள்ளது. இந்தப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்ற 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் முதற்கட்ட பணிகள் நிறைவேற்றப்படும்.
மேட்டூர் அணையின் உபரி நீரை கொண்டு 100 வறண்ட ஏரிகளை நிரப்புவதற்காக சரபங்கா நீரேற்றுபாசனத் திட்ட பணிகள் 565 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் இந்தப் பணிகள் முடிவடையும்.
விவசாயிகள் நலனை பாதுகாப்பதற்காக பல்வேறு செயல்திறன்மிக்க நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது தமிழ்நாடு அரசு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்பாட்டு சட்டத்தின் வாயிலாக காவிரி டெல்டா பகுதியில் உள்ள வேளாண் விளை நிலங்கள் மற்றும் விவசாயிகள் வேளாண் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் மூலம் காவிரி டெல்டா மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றியதால் அவருக்கு வழங்கப்பட்ட காவிரி காப்பாளன் என்ற பட்டத்துக்கு பொருத்தமானவராக இருந்து வருகிறார்.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த நான்காண்டுகளில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் இழப்பிற்காக 9312 கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது
இந்தியாவிலேயே நுண்ணீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. நீர் பயன்பாட்டு திறனை மேம்படுத்துவதற்காக 2019 - 20 ஆம் ஆண்டில் ஆயிரத்து 112 கோடி ரூபாய் மானியத்துடன் 6.58 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நுண்நீர் பாசன அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டு அதன் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையம் விரைவில் செயல்பட தொடங்கும்.
இலங்கையின் காவலில் இருக்கும் மீதமுள்ள 12 மீனவர்களையும் மீட்டெடுக்க அரசு தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. 200 கடல் மைல்கள் பரப்பளவில் உள்ள பிரத்யோகமான பொருளாதார மண்டலத்திற்கு தமிழ்நாடு மீனவர்கள் பயன்படுத்த ஏதுவாக ஆழ்கடலில் மீன் பிடித்தலை ஊக்குவிப்பது இந்த அரசின் முக்கிய நோக்கம்.
தேங்காய் பட்டணத்தில் 97 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மூக்கையூரில் 129 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், பூம்புகாரில் 178 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மீன்பிடி துறைமுகங்களில் பணிகளும் குந்துக்கல்லில் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளத்தில் பணிகள் நிறைவடைந்துள்ளன.
திருவெற்றியூர் குப்பத்தில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் தரங்கம்பாடியில் 102 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் வெள்ளத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் முதுநகரில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மீன்பிடி துறைமுகங்களில் கட்டுமான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அழகன் குப்பம் ஆலம்பறைக்குப்பம் மற்றும் ஆற்க்காட்டு துறையில் 385 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகங்களை கட்டுவதற்கான நிதி உதவி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இஸ்ரோ உதவியுடன் செயற்கைக்கோள் அடிப்படையிலான தடையற்ற தகவல் தொடர்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. மீன்வளத் துறையின் கீழ் 112 காவல் பணியாளர்களைக் கொண்ட கடல் அமலாக்கப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
கரோனா நிவாரண நடவடிக்கையாக 19.95 லட்சம் மெட்ரிக் டன் விலையில்லா அரிசி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பருப்பு, பாமாயில் மற்றும் சர்க்கரை ஆகியவை வழங்கப்பட்டன.
2019ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 81 திட்டங்கள் வமிக ரீதியிலான உற்பத்தியை தொடங்கி விட்டன. மேலும் 191 திட்டங்களில் பல்வேறு நிலைகளில் செயல்பாடுகளில் உள்ளன. கூடுதலாக 149 திட்டங்களில், ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 664 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலீட்டை எதிர்த்து 2 லட்சத்து 42 ஆயிரத்து 705 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை தமிழ்நாடு அரசு அளித்துள்ளது.
வளர்ந்து வரும் துறைகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக மின்சார வாகனம் கொள்கை மற்றும் மின்னணு வன்பொருள் உற்பத்தி கொள்கை அரசு அறிவித்துள்ளது. இவை இரண்டும் மேலும் முதலீடுகளை ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்துள்ளன. தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் விதமாக புதிய தொழில் கொள்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது இக்கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
தமிழ்நாட்டில் இரண்டு லட்சத்து 73 ஆயிரத்து 241 கோடி ரூபாய் முதலீட்டுடன் 1.52 கோடி நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கூடிய 23.60 லட்சம் பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. அனைத்து தரப்பினரும் கலந்து ஆலோசித்து புதிய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் கொள்கை இறுதி செய்யப்பட்டு முதலமைச்சரால் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
இந்திய அரசின் அவசர கால கடன் உத்திரவாத திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன் அடைவதை உறுதி செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் சொத்து ஆவணங்களை அடமானம் செய்யும் பத்திரப்பதிவு மீதான முத்திரைத் தீர்வை செலுத்துவதிலிருந்து அரசு மார்ச் 31, 2021 வரை விலக்கு அளித்துள்ளது. மேலும் அவர்களுக்கான பதிவு கட்டணத்தை 1 விழுக்காட்டிலிருந்து 0.1 விழுக்காடாக குறைத்துள்ளது.
கடந்த 1908 ஆண்டு பதிவு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் குறிப்பிட்ட கால கடன்கள் மற்றும் நடைமுறை மூலதன கடன் பெறும் பொருட்டு பத்திரப்பதிவு செய்ய பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு கடன் பெறுபவர்கள் கடன் வழங்குபவர்கள் நேரில் செல்வதை தவிர்த்து சொத்து ஆவணங்களை அடமானம் செய்து பத்திரங்களை இணையவழியில் பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்படும்
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைவிட அவசர கால கடன் உத்திரவாதம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அதிக அளவில் பயனடைந்துள்ளது. மாநிலத்தில் மூன்றில் ஒரு பங்கு வருவாய் கிராமங்களில் 2021 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள்ளும் எஞ்சிய கிராமங்களில் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் பாரத் நெட் திட்டம் செயல்ப்படுத்தப்படும்.
மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அதிவேக மற்றும் அளவிட தக்க அலைவரிசையை வழங்குவதற்கு ஏதுவாக தமிழ்நாடு மாநில பெரும் பரப்பு வலையமைப்பு தமிழ்நெட் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் ஒளிபரப்பு உட்கட்டமைப்புடன் பாரத் நெட்டை இணைப்பதன் மூலம் ஒரு ஒருங்கிணைந்த மின்னணு சேவை விநியோக தலமான ஒருங்கிணைந்த மின்னணு உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.
ரூ.61 ஆயிரத்து 843 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.9 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு 50:50 பகிர்வு அடிப்படையில் மத்திய அரசு தங்களுடைய பங்கு மூலதனத்தில் கூறிய ஒப்புதல் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை கூட்டம் மூன்று நாட்கள் மட்டுமே!