சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தனது மவுனத்தைக் கலைத்து, தமிழ்நாடு சட்டப்பேரவை இயற்றி அனுப்பியுள்ள மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கக்கோரி பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "நீட் என்னும் கொடுங்கோன்மை, மாணவர்களைப் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி, பள்ளிக் கல்வியையும், மருத்துவக் கல்வியையும் சிதைத்து, மாநில அரசின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை நலிவடையச் செய்யும் மிகப்பெரிய வணிகச் சதியின் ஒரு பகுதி ஆகும். வணிக நோக்கத்திற்காக மட்டுமே நீட் மாநிலங்களின் மீது திணிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டம்
நீட் தேர்வு மாணவர்களைத் தகுதியும் படுத்தாது, தகுதியானவர்களை மருத்துவக் கல்வியில் சேரவும் விடாது என்பதை நான்காண்டு கால நீட் முறைகேடுகள் நிரூபித்துள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் கட்டணமில்லாமல் கல்வி பயிலும் வாய்ப்பாக அமைந்துள்ள பள்ளிக் கல்வியைச் சிதைத்து, பயிற்சி மையங்களில் பகடைக் காய்களாக மாணவர்களை நிற்கவைத்து பணம் இருந்தால் மட்டுமே உயர் கல்வி என்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கும் நீட், கட்டணக் கொள்ளையைத் தடுக்க இயலாது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் வேண்டாம் என்று 2016ஆம் ஆண்டுமுதல் மக்கள் போராடியது மட்டுமல்லாமல், 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நீட்டை நிராகரித்து பொதுமக்கள் வாக்களித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம், அகில இந்திய அளவில் நடைமுறையில் இருந்தாலும், ஒரு மாநிலம் தனது மக்களின் தேவைகளை உணர்ந்து, தன் மாநிலத்திற்கென்று சட்டப்பேரவையில் ஒரு சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்தி நிறைவேற்றினால், அத்தகைய மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து, கூட்டாட்சித் தத்துவத்தைக் குடியரசுத் தலைவர் உயர்த்திப் பிடிக்க, இந்திய அரசமைப்புச் சட்டம் வழிவகுத்துள்ளது.
குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திட மசோதாவை அவருக்கு மாநில ஆளுநர் அனுப்பிவைக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நியாயமான கோரிக்கை
இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நேற்று (டிசம்பர் 10) கூறுகையில், "சட்டத்தை மதித்து மாணவர்கள் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தும் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர் பொறுப்பில் இருக்கும் ஆளுநர் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகளை உணர்ந்து நடந்து கொள்ளாதது வேதனையளிக்கிறது.
பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாநிலையில் அமரப் போகின்றனர். நாளை (டிசம்பர் 11) தமிழ்நாடு முழுவதும், உண்ணாநிலையை மேற்கொள்ள இருக்கும், மாணவர்களின் நியாயமான கோரிக்கை வெல்ல வேண்டும். நீட் விலக்கு கோரிக்கை நிறைவேறும்வரை எழுச்சிமிக்க வர்க்கப் போராட்டமாக, இதைத் தொடர்ந்து நடத்திட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா பயன்படுத்திய கட்டிலைக் காணவில்லை: ஜெ.தீபா குற்றச்சாட்டு