சென்னை : தாம்பரம் மெப்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 2016-2017 மற்றும் 2017-2018 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள பொருளாதார சிறப்பு மண்டலங்களில் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இதில் சிறந்த ஏற்றுமதியாளர்கள் 219 பேர்க்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
விழாவில் ஆளுநர் பேசுகையில், "நாட்டின் முன்னேற்றத்திற்கு தொழில்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. ஐந்தாண்டு திட்டங்களை மாற்றியமைத்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடி தொழில்துறையில் இலக்கு நிர்ணயித்துச் சிறப்பான திட்டங்களை அளித்துள்ளார். இதன் காரணமாக தொழில்துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்துறையினர் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
கடந்த ஆண்டு கரோனாவால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தோம், கரோனா இன்னும் ஓயவில்லை. ஒமிக்ரான் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்/ கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றார்.
விழாவில் சிட்கோ நிர்வாக இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால், மெப்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டல மேம்பாட்டு ஆணையர் சண்முகசுந்தரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சக்திவாய்ந்த முதலமைச்சராகத் திகழும் ஸ்டாலின் - ஆளுநர் ரவி