சென்னை: பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பல்கலைக் கழக துணை வேந்தர்கள் நியமனத்தை, மாநில அரசே மேற்கொள்ளும் சட்ட வரைவிற்கு ஒப்புதல் மறுத்து ஆளுநர் அடம் பிடித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விடவும் தனக்கு அதீத அதிகாரங்கள் இருப்பதாக காட்டிக்கொள்ளும் அடாவடித்தனத்தின் தொடர்ச்சியே இதுவாகும்.
குஜராத், தெலங்கானா மாநிலங்களில் துணை வேந்தர் நியமனத்தை மாநில அரசுகளே மேற்கொள்கின்றன. அங்கு பல்கலைக் கழக மானியக்குழு விதிமுறைகளின்படியே நியமனங்கள் நடக்கின்றன. அதையே தமிழ் நாட்டிலும் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், மசோதா நிறைவேறினால் 'அரசியல் தலையீடு' வந்துவிடும் என ஆளுநர் தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆளுநர் மேற்கொண்ட முறைகேடான துணை வேந்தர்களை நீதிமன்றம் தலையிட்டு பதவி நீக்கம் செய்ததே, அதனை என்னவென்பது?
மாநிலப் பல்கலைக்கழகத்தில், ஜனநாயக விரோதமான அரசியலை புகுத்துவதே ஆளுநர்தான். துணை வேந்தர்களுக்கு தனி மாநாடு நடத்துவது, உயர்கல்வித் துறை அமைச்சரையே ஆலோசிக்காமல் பட்டமளிப்பு விழா நடத்துவது என்று தனி ராஜ்ஜியம் நடத்த முயன்றார். உயர்கல்வி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக்குவதும், மாநில அரசின் கொள்கைக்கு மாறாக புதிய கல்விக் கொள்கையை திணிக்கவும் தொடர்ந்து முயற்சிக்கிறார்.
இந்த பின்னணியில் தான் மாநில அரசுக்கு புதிய சட்டம் நிறைவேற்றிடும் தேவை எழுந்தது. எனவே, ஆளுநர் தனது நாடகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தை குறுக்கு வழியில் பறிக்க முயற்சிக்கும் ஒன்றிய ஆட்சியாளர்களின் தொடர் கொட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மாநில அரசின் சட்டத்திற்கு உடனே அனுமதியளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தரமற்ற உணவகங்கள் மீது நடவடிக்கை தேவை...அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை...