சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஏப்.12) கேள்வி நேரத்தின் போது பேரவை உறுப்பினர் முத்துராஜா, புதுக்கோட்டை நகராட்சி 40ஆவது வார்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் அரசு ஊழியர்களுக்கு குடியிருப்பு கட்ட அரசு ஆவன செய்யுமா எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, "புதுக்கோட்டை நகராட்சி 40ஆவது வார்டில் துறைக்கு சொந்தமான 2.53 ஏக்கர் நிலம் உள்ளது. மேலும் 42 சென்ட் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை தவிர்த்து வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் 2.53 ஏக்கரில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் 36ஆவது வார்டில் 5.59 ஏக்கரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 162 வீடுகள் உள்ளன. பழைய வீடு என்பதால் இடிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு புதிய வீடு கட்டித் தரப்படும். அதேபோல், ஆலங்குளம் பகுதியில் உள்ள பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு தேவையான வீடுகள் கட்டித் தரப்படும்" என்று அமைச்சர் தெரிவித்தார் .
இதையும் படிங்க: காவல்துறைக்கு ரூ.66.48 கோடி மதிப்பீட்டில் கட்டடம் திறப்பு