சென்னை: எழும்பூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 34 மாணவர்களுக்கு 9 முதுகலை ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறை உத்தரவின்படி மாணவர்கள் சேர்க்கைக்கான விளம்பரப்பதாகை வைக்கப்பட்டும், ஆறாம் வகுப்பில் ஒரு மாணவரும் இதுவரை சேரவில்லை.
கடந்த 2002-2003ஆம் கல்வியாண்டில் 217 மாணவர்கள் படித்த பள்ளியில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 34 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். 6ஆம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை ஒற்றை இலக்கத்திலேயே இருந்துள்ளது. சென்னையின் மையப்பகுதியில் இருப்பதால், மாணவர்கள் இல்லாத நிலையிலும் ஆசிரியர்கள் பணியிடம் தொடர்ந்து நிரப்பப்பட்டு வந்துள்ளது.
சில அரசுப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் நிலையில், சென்னை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள எழும்பூர் டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளியில், வெறும் 34 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இவர்களுக்காக ஒன்பது ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 2 பேர் என 11 பேர் பாடம் நடத்தி வருகின்றனர்.
தேவைக்கு அதிகமான ஆசிரியர்கள்: பல அரசுப்பள்ளிகளில் போதிய எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தும், ஆசிரியர்கள் இல்லாத நிலையில், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள இந்தப்பள்ளியில் தேவைக்கு அதிகமாக ஆசிரியர்கள் இருந்துபணியாற்றி வருகின்றனர். முதுநிலை வகுப்பிற்கு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் என விதி இருந்தாலும், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் கற்க முடியாமல் தவிக்கின்றனர்.
அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அதிகபட்சமாக 2011- 12ஆம் கல்வி ஆண்டில் 348 பேர் படித்திருக்கின்றனர். 2016 - 17ஆம் கல்வி ஆண்டில் இருந்து மாணவர்கள் எண்ணிக்கை 100க்கும் கீழாக சரிந்து, இந்த ஆண்டு தற்போது வெறும் 34 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.
6ஆம் வகுப்பில் ஒரு மாணவர் கூட கிடையாது. 7ஆம் வகுப்பில் 2 பேர், 8ஆம் வகுப்பில் ஒரு மாணவரும், ஒன்பதாம் வகுப்பில் 3 பேர் , 10ஆம் வகுப்பில் 5 பேர், 11ஆம் வகுப்பில் 4 பேர், 12ஆம் வகுப்பில் 19 பேர் என 34 பேர் மட்டுமே தற்போது பயின்று வருகின்றனர்.
20-க்கும் அதிகமான ஆசிரியர்கள் இங்கே பணி புரிந்த நிலையில், போதிய மாணவர்கள் இல்லாததால் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரையும் வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், தற்போது இந்த 34 மாணவர்களுக்கு, 8 முதுகலை ஆசிரியர்கள், ஒரு தலைமை ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 2 பேர் என 11 பேர் பணியாற்றி வருகின்றனர்.
மக்களின் எதிர்பார்ப்பு என்ன? சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்தப் பள்ளியில் தண்ணீர் வசதி இல்லாமலும், கழிவறை வசதி கூட இல்லாமலும் உள்ளது. பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூகநீதியைப் பெற்றுத் தந்தவரின் பெயரில் உள்ள இந்தப் பள்ளி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் செலுத்த திட்டம்!