சென்னை: கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சென்னையில் கூட்டமான இடங்களையும், நீண்டதூர சாலைகளையும் கண்காணிப்பதற்காக மூன்று கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் நடமாடும் ஆளில்லா விமான காவல் பிரிவு (Drone Police Unit) அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
அதன்படி உள் துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே. பிரபாகர் வெளியிட்டுள்ள அரசாணையில், "நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி காவல் பணியில் பொதுமக்களைப் பாதுகாப்பதில் சென்னை காவல் துறை முதன்மையாக இருக்கிறது.
3 வகையான 9 ட்ரோன்கள்
அந்த அடிப்படையில் குற்றங்களைக் குறைக்க, கண்காணிப்புப் பணியில் ஈடுபட உதவியாக இருக்கும் வகையில் ஆளில்லா விமான காவல் பிரிவு அமைக்க அரசுக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பியிருந்தது. குறிப்பாக முக்கியப் பிரமுகர்கள் வரும் சாலைகளில் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளவும், கடற்கரையில் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளவும், உயரமான கட்டடங்களில் தீ விபத்தின்போது யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய ஆளில்லா விமானத்தின் பயன்பாடு மிகவும் உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, பாண்டி பஜார் ஆகிய இடங்களில் நடமாடும் ஆளில்லா விமான காவல் பிரிவு செயல்பட உள்ளது. மொத்தம் ஒன்பது ஆளில்லா விமானங்கள் (Drone) வழங்கப்பட உள்ளன.
Quick response என்ற வகையில் உடனடியாக உதவுவதற்கு ஏதுவாக, HD கேமராக்கள், இரவு நேரமும் காட்சிகளைப் பதிவுசெய்யும் வகையில், பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யும் வகையில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட, 2 கிமீ தூரத்துக்கு 30 நிமிடம் தொடர்ந்து பறக்கும் 6 ஆளில்லா விமானங்கள் வழங்கப்படுகின்றன.
நீண்ட தூரத்தைக் கண்காணிக்கும் வகையில், சுமார் 100 நிமிடங்களுக்கு 30 கிலோ மீட்டர் தூரம் பறந்துசென்று கண்காணிக்கும் வசதிகளைக் கொண்ட இரண்டு ஆளில்லா விமானங்கள், அதிக திறன், அதிக எடையைச் சுமந்து சென்று 15 நிமிடங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் பறக்கும் ஒரு ஆளில்லா விமானம் சென்னை காவல் துறைக்கு வழங்கப்படுகிறது.
ரூ.3.60 கோடி நிதி
இதற்கான அனைத்து வசதிகளும் கொண்ட கட்டுப்பாட்டு அறை போன்ற அலுவலகம் அமைக்க 60 லட்சம் ரூபாயும், ஒன்பது ஆளில்லா விமானங்கள் வாங்க மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆளில்லா விமான காவல் பிரிவு அமைப்பது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (MIT) உள்ள ஆளில்லா விமான பிரிவுத் துறையுடன் டிஜிபி இணைந்து செயல்படுவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஓட்டைகள் மூலம் குற்றவாளி தப்பிக்க சட்டம் அனுமதிக்காது - போக்சோ வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு