இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் அனைத்து மாநில அரசுத் துறைகளிலும் பணியாற்றும் யோகா, இயற்கை மருத்துவர்களுக்கான மூன்று நாள்கள் இணையவழிப் புத்தாக்க பயிற்சி முகாமை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடத்தியது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மருத்துவர்கள் உள்ளிட்ட சுமார் 400 மருத்துவர்கள் இம்முகாமில் கலந்துகொண்டனர். தொடக்கத்திலிருந்தே பயிற்சியாளர்கள் இந்தி மொழியில் மட்டுமே வகுப்புகளை நடத்தினார்கள்.
மூன்றாவது நாள் வகுப்பை அமைச்சகத்தின் செயலர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா நடத்தியுள்ளார். அவரும் முழுக்க முழுக்க இந்தி மொழியிலேயே வகுப்பை நடத்தியுள்ளார். ஆங்கிலத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அவர் ஏற்கவில்லை.
அதுமட்டுமின்றி, தமக்குச் சரளமாக ஆங்கிலம் பேச வராது என்றும், அதனால் இந்தியில் மட்டும்தான் வகுப்பு நடத்த முடியும் என்றும் கூறியுள்ளார். இந்தி புரியாதவர்கள் வகுப்புகளை விட்டு வெளியேறலாம் என்று செருக்குடன் கூறியுள்ளார்.
தலைமைச் செயலர் நிலையிலான மத்திய அரசின் செயலர் நிலையில் உள்ள அலுவலர் ஒருவர் தமக்கு ஆங்கிலம் தெரியவில்லை; அதனால் இந்தியில்தான் பேசுவேன் என்று கூறியது அவரது ஆணவத்தை மட்டுமல்ல. அவர் அந்தப் பதவியில் நீடிக்க தகுதியற்றவர் என்பதையும் வெளிப்படுத்தி உள்ளது.
அதுமட்டுமின்றி, ஆங்கிலத்தில் வகுப்பு நடத்தும்படி கோரியதற்காக மாநில அரசு பணியில் உள்ள மருத்துவர்களை மிரட்டுவதும், அவர்களைப் பற்றி விசாரிப்பதும் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
ஆயுஷ் அமைச்சக செயலர் பதவியில் ஆங்கிலம் தெரியாத கொடேச்சாவுக்கு பதில், ஆங்கிலம் பேசத் தெரியாத தமிழ் அலுவலர் ஒருவர் இருந்து, தம்மால் தமிழில் மட்டும்தான் பாடம் நடத்த முடியும் என்று கூறியிருந்தால், அதற்கு இந்தி பேசும் மாநில அரசுகளிடமிருந்து எத்தகைய எதிர்வினைகள் வந்திருக்கும்? அந்த அலுவலரின் நிலைமை என்னவாகியிருக்கும்? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
ஒரு நாட்டிற்குள் இருந்தாலும் இந்திக்கும், தமிழுக்கும் இந்த அளவுகளில் தான் மரியாதை கிடைக்கிறது. ஆயுஷ் பயிற்சி முகாமில் இந்தியை திணித்து, தமிழ்நாடு மருத்துவர்களை அவமானப்படுத்தி, மிரட்டிய மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் கொடேச்சாவுக்கு தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுத வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.