சென்னை: சமீப காலமாக தமிழக போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பத்தேவை எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான காலிப்பணியிடங்களில் 812 பேர் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அந்த அரசாணையின்படி தமிழகத்தில் கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய கோட்டங்களில் 1,602 காலிப்பணியிடங்கள் இருந்துள்ளன. இதில் 1,422 பணியிடங்களை நிரப்ப போக்குவரத்து வாரியம் பரிந்துரை செய்தது.
நிரப்பப்பட உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை: அந்தப் பரிந்துரையின் பேரில் முதல்கட்டமாக 812 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதில் கும்பகோணம் கோட்டத்திற்கு 174 பேர், சேலம் கோட்டத்திற்கு 254 பேரும், கோயம்புத்தூருக்கு 60 நபர்களும், மதுரைக்கு 136 நபர்களும், திருநெல்வேலிக்கு 188 நபர்களும் என மொத்தம் 812 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பணி இடங்களுக்கான கல்வித் தகுதி:
இந்தப் பணிக்கான கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வெண்டும். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமத்துடன் நடத்துநர் உரிமமும் வைத்திருக்க வேண்டும் ஆகிய தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த அரசாணையை போக்குவரத்து சங்கங்கள் வரவேற்றுள்ளது. எனினும், மீதம் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து நேதாஜி டிரான்ஸ்போர்ட் யூனியனின் மாநிலச் செயலாளர், ராமமூர்த்தி நம்மிடம் கூறுகையில், "இந்த அரசாணையை வரவேற்கிறோம். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் காலிப்பணியிடங்கள் அதிக அளவில் இருந்தது, அது தற்போது உள்ள பணியாளர்கள்களுக்கு பணிச்சுமையை அதிகரித்தது" என அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மட்டுமல்லாமல் இதரப் பணிகளுக்கும் காலியிடங்கள் உள்ளதால் அதனையும் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.