சென்னை: போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை தினங்களையொட்டி ஆம்னி பேருந்துகளில், வழக்கத்துக்கு மாறான அதிக கட்டணம் வசூலிக்கும் புகார்கள் குறித்து கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை சென்னை வடக்கு சரகப் பகுதியில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 23ஆம் தேதி கோயம்பேடு மற்றும் போரூர் சுங்கசாவடி பகுதிகளில் ஆம்னி பேருந்துகள் சோதனை செய்யப்பட்டன. அதில் வழக்கத்திற்கு மாறாக அதிக கட்டணம் வசூலிப்பது, வரி செலுத்தாமல் இயக்கப்படும் பிற மாநில ஆம்னி பேருந்துகள் குறித்து சோதனை செய்யப்பட்டது.
இதில் 49 ஆம்னி பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, 92,500 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும், வழக்கத்துக்கு மாறான அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் பெறப்பட ஆம்னி பேருந்துகளில் இருந்து 9 பயணிகளுக்கு 9,200 ரூபாய் கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டது.
இது போன்று வரி செலுத்தாமல் இயக்குவது, அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளின்படி தொடர்ந்து கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் மீது அதிரடி ஆக்ஷன் - மிரட்டும் சென்னை போலீசார்