சென்னை: கடலூர் மாவட்டம் சிலம்பிநாதன் பேட்டை ஊராட்சியில் அரசிற்குச் சொந்தமான 186 ஏக்கர் தரிசு நிலத்தை, எந்த ஆவணங்களும் இல்லாமல், தனி நபர்களுக்கு பட்டா பதிவு செய்து கொடுத்துள்ளதாகக் கூறி, சிலம்பிநாதன் பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் தெய்வானை சிங்காரவேலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பட்டா வழங்கி உத்தரவு பிறப்பித்த கடலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அதனை அடுத்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஆஜரானார். அப்போது, மனுதாரர் தரப்பில், தரிசு நிலம், வனப்பகுதி, கிராம நத்தம், நீர் நிலை ஆகிய நிலங்கள் நில நிர்வாக ஆணையரின் அனுமதி இல்லாமல், பட்டா நிலமாக மாற்றி, தற்போதைய திமுக நாடாளுமன்ற உறுப்பினர், திரைப்பட இயக்குநர் ஆகியோரின் உறவினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிலங்களில் சட்ட விரோதமாக முந்திரி ஆலைகள் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
அரசுத் தரப்பில், மனுதாரர் ஒரு குறிப்பிட்ட நிலத்தை சுட்டிக்காட்டிவிட்டு, வேறொரு நிலத்தை முன்வைத்து வாதங்களை முன்வைப்பதாகவும், குறிப்பிட்ட நிலத்தை அளவீடு செய்யவும், ஆக்கிரமிப்பு இருந்தால் நடவடிக்கை எடுக்க தாசில்தார் உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும், பட்டாவை ரத்து செய்யும் அதிகாரம் அவருக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மக்கள் வரி பணத்திலிருந்து சம்பளம் பெறும் அரசு ஊழியராக இருக்கக்கூடிய ஆர்.டி.ஓ. பொதுப்பணியை செய்ய வேண்டுமே தவிர, கட்சி ஊழியராக செயல்படக் கூடாது என அறிவுறுத்திய நீதிபதி, கட்சி சார்ந்து செயல்பட்டால், அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், அரசு ஊழியர்கள் எப்போதும் முழு அர்ப்பணிப்புடனும், பொது நலனுடனும் பணியாற்ற வேண்டியது அவர்களின் கடமை எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
அரசு நிலங்கள், நீர்நிலைகளை பட்டா நிலங்களாக மாற்றியது போன்ற குற்றச்சாட்டுகளின் தன்மையும், பரப்பளவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது என்றும், அதிகாரிகளின் பெரிய அளவிலான கூட்டுச் செயல்கள் இதில் இருப்பதை நிராகரிக்க முடியாது என்றும் நீதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் குரலற்றவர்களாய் இருக்கும் ஏழை எளிய மக்களின் உரிமைகளைப் பாதிக்கும், சட்டவிரோதச் செயல்களை நீதிமன்றம் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளார். அதிகாரிகள் ஊழல் செய்தால், சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.
மேலும், விசாரணை முறையாக நடத்தாமல் பட்டாவை ரத்து செய்யக்கோரும் மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்தார். தொடர்ந்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜூலை 21ஆம் தேதி உத்தரவு பிறப்பித்ததை சுட்டிக் காட்டிய நீதிபதி, தரிசு நிலத்தை பட்டா நிலமாக மாற்றி, அதை ஆடம்பரத் தேவைகளுக்குப் பயன்படுத்தி உள்ளதாகவும், இதில் அதிகளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு நில நிர்வாக ஆணையர் 3 மாதங்களில் விரிவான மற்றும் நேர்மையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.