அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளான சம்பள உயர்வு, பட்ட மேற்படிப்பில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு ஆகியவற்றை வலியுறுத்தி சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக கடந்த 23ஆம் தேதி தொடங்கி இன்று வரை அரசு மருத்துவர்கள் 6 பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் இருவரின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பேசிய அரசு மருத்துவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், 'தமிழ்நாட்டில் பணியில் உள்ள சுமார் 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு வழங்கக்கோரி, பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ஏற்கனவே மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. ஆனால் இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளைக் காரணம் காட்டி மருத்துவர் பணியிடங்களை மேலும் அரசு குறைத்துள்ளது. எனவே இதனைத் திரும்பப் பெற வேண்டும். மேலும் அரசு மருத்துவர்களின் பட்ட மேற்படிப்பில் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்துவிட்டது. அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உடனடியாக மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த அரசு மருத்துவர்களுக்கு, உடனடியாக கலந்தாய்வு நடத்திட வேண்டும். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக அழைத்துப் பேசி எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதன் படி நாளை அனைத்து அரசு மருத்துவமனையிலும் அவசர சிகிச்சை பாதிக்காத வகையில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும்' என்றார்.