சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக அரசு மருத்துவர்கள் ஆறு பேர், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பேசிய அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், தமிழ்நாட்டில் பணியில் உள்ள 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காலம் சார்ந்த ஊதியம் வழங்கக்கோரி பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகிறோம். தற்போது ஐந்து கட்டங்களாக போராட்டம் நடத்தியும் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ஏற்கனவே மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. இந்நிலையில் இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளை காரணம் காட்டி மருத்துவர் பணியிடங்களை மேலும் அரசு குறைக்கிறது. இதைத் திரும்பப் பெற வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு ஏற்கனவே பட்ட மேற்படிப்பில் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை இந்திய மருத்துவக் கவுன்சில் ரத்து செய்துவிட்டது. எனவே அரசு மருத்துவர்களுக்கு பட்டமேற்படிப்பு, உயர் சிறப்பு மருத்துவ படிப்பிலும் வழங்கப்பட்டு வந்த 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உடனடியாக மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த அரசு மருத்துவர்களுக்கு உடனடியாக கலந்தாய்வு நடத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் ஏற்கனவே ஐந்து கட்டங்களாக போராட்டங்களை நடத்தியுள்ளோம் என்றார்.
எங்கள் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை அதனால் இன்று முதல் ஆறு மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம். அரசு எங்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றாத நிலையில், வரும் 27ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனையிலும் அவசர சிகிச்சை பாதிக்காத வகையில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக எங்கள் கோரிக்கையை வலியுறுத்தியும் அரசு எங்களுடன் 2009ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதனை நிறைவேற்றாததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம், என்றார்.