சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்குப் பள்ளிகளிலேயே கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,
சுகாதாரத்துறை அலுவலர்கள் 8ஆம் தேதிக்குள் மாணவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதை உறுதி செய்யவும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்குத் தடுப்பூசி:
இந்தியா முழுவதும் 15 முதல் 18 வயதுக்குட்பட்டப் பள்ளி மாணவர்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாளை (ஜன 3) முதல் தொடங்குகிறது.
இதற்கான முன்பதிவு கோ-வின் வலைத்தளத்தில் தொடங்கியது. 2007ஆம் ஆண்டிலோ, அதற்கு முன்பு பிறந்தவா்களோ கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதியானவா்கள்.
பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதாா் அட்டையைக் கொண்டு தடுப்பூசிக்குப் பதிவு செய்யலாம். தமிழ்நாட்டில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறாா்கள் 33.46 லட்சம் போ் உள்ளனா்.
வரும் 3ஆம் தேதி சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்துப் பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறுகையில், 'தமிழ்நாட்டில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 33.46 லட்சம் பள்ளி மாணவர்கள் உள்ளனா். அதில், 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனா்.
ஜனவரி 8-ற்கு முன் தடுப்பூசி செலுத்த வேண்டும்:
அதனால், பள்ளிகளில் இடம் ஒதுக்கி சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் கரோனா தடுப்பூசிப் பணியை ஒருங்கிணைக்க ஆசிரியா் ஒருவரை தலைமையாசிரியா் நியமிக்க வேண்டும்.
பள்ளிகளில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதியான மாணவா்களின் பட்டியலைத் தயாா் செய்ய வேண்டும்.
கோ-வின் வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. பதிவு செய்யவில்லை என்றாலும் சுகாதாரத்துறைப் பணியாளா்கள் பதிவு செய்து, தடுப்பூசியை செலுத்துவாா்கள் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மாவட்ட சுகாதார இணை இயக்குநா்கள் உள்ளிட்ட அலுவலர்களுக்குச் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கு ஜனவரி 8ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும். மாணவர்கள் தடுப்பூசி செலுத்திய விவரத்தினை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்' எனத் தெரிவித்தார்.
தற்பொழுது பரவும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பைக் கருத்தில் கொண்டு, தடுப்பூசியை மாணவர்கள் செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளார்.