சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது: ”நான் பல ஆண்டுகளாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சென்றுவருகிறேன். இந்த மருத்துவமனை முன்பிருந்ததைவிட தற்போது ஏராளமான நவீன வசிகளுடன் மாறியுள்ளது. தற்போது, இந்த மருத்துவமனையில் லிஃப்ட்கள் வேலை செய்யவில்லை. இதனால் வயதானவர்கள், நோயாளிகள் அதனை பயன்படுத்த முடியவில்லை. போதிய செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், நிர்வாக ஊழியர்கள் இல்லை. மருத்துவப் பணியாளர்கள் குடியிருக்கும் தெருக்களில் உள்ள மக்கள், அவர்களை மருத்துவமனைக்கு செல்லக்கூடாது, சென்றாலும் திரும்ப வரக்கூடாது என நிர்பந்திப்பதாக வேதனைத் தெரிவிக்கிறார்கள்.
மருத்துவமனைக்கு வருவதற்கு எந்த போக்குவரத்து வசதியும் இல்லை. அவர்கள் சென்று வர தமிழ்நாடு அரசு போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல், பல ஆண்டுகளாக தற்காலிக தொழிலாளர்களாகப் பணியாற்றும் செவிலியர்களை அரசு நிரந்தமாக்க வேண்டும். குறிப்பாக, 108 ஆம்புலன்ஸ் முறையாக இயங்கவில்லை. நோயாளிகள் சென்று வருவதற்கான ஏற்பாடும் இல்லை. உணவகங்கள், தண்ணீர் விற்கும் கடைகள் மூடப்பட்டுள்ளதால் நோயாளிகள், அவர்களுக்கு உதவுபவர்கள் அவதிக்குள்ளாகிறார்கள்.
’என்னுடைய இலாகா மூலமாகவே அனைத்தும் செய்துவிடுவேன்’ என்ற மன நிலையிலிருந்து ஆளுங்கட்சி மாற வேண்டும். இந்த நேரத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பார்க்கக்கூடாது. சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதார வல்லுநர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடன் கலந்தாலோசித்து செயல்பட வேண்டும்.
ஊரடங்கு பிரகடனம் வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால் 400-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை எனக் கூறினார்கள். அவர்களுக்கு இன்னும் சம்பளம் கொடுக்கப்படவில்லை. இதனால் மருத்துவமனைகளில் குப்பைகள் குவிகின்றன. துப்புரவு பணியாளர்களை தூய்மை பணியாளர்கள் என மாற்றி எந்த பயனுமில்லை. அவர்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும். மருத்துவமனை தற்போது பெருங்குழப்பத்தில் இருக்கிறது. நோய்க்கு சிகிக்கை அளிக்கும் இடம் நோயை பரப்பும் இடமாக உள்ளது”.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: கரோனா அச்சம்: விழுப்புரத்தில் 3 வார்டுகளுக்கு சீல்