சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத் துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.
அப்போது கொழும்புவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம்செய்த மதுரையைச் சேர்ந்த பஷீர் அகமது (35), சென்னையைச் சேர்ந்த முகமது சதாம் உசேன் (28), மலேசியாவிலிருந்து வந்த விமானத்தில் பயணம்செய்த திருச்சியைச் சேர்ந்த முகமது பாசில் (22) ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மூவரும் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறியதால் அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். ஆனால், அதில் ஏதும் சிக்கவில்லை. பின்னர், தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்ததில் உள்ளாடைக்குள் தங்கச் சங்கிலி, தங்கக்கட்டிகளை மறைத்துவைத்து கடத்திவந்தது தெரியவந்தது. மூவரிடமிருந்து ரூபாய் 80 லட்சம் மதிப்புள்ள இரண்டு கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.
அதேபோல், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம்செய்த சென்னையைச் சேர்ந்த தர்மலிங்கம் (45), முத்துராமலிங்கம் (40), ராமமூர்த்தி (39), நித்யா மணிகண்டன் (28) ஆகிய நான்கு பேரை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.
பின்னர், அவர்களது உடமைகளை சோதனை செய்ததில் டிராலி சூட்கேசின் கைப்பிடியில் தங்கத்தை மறைத்துவைத்து கடத்திவந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூபாய் 25 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 641 கிராம் தங்கத்தை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும், துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த மதுரையைச் சேர்ந்த மஸ்தான் கனி (33), சுல்தான் சையத் இப்ராகிம் (32) ஆகியோரிடம் சந்தேகத்தின் பேரில் சுங்கத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்களைத் தனியறையில் வைத்து நடத்திய சோதனையில், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்துவைத்து கடத்திவந்ததை கண்டுபிடித்தனர். பின்னர், அவர்களிடமிருந்து ரூபாய் 34 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான 862 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.
சுங்கத் துறை அலுவலர்கள் நடத்திய இந்தச் சோதனையில், மொத்தம் ஒன்பது பேரிடமிருந்து ரூபாய் ஒரு கோடியே 40 லட்சம் மதிப்பிலான மூன்று கிலோ 503 கிராம் தங்கத்தை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இந்தத் தங்கங்கள் யாருக்காக கடத்திவரப்பட்டது. இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து அலுவலர்கள் தீவிர விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: வாக்காளர்களுக்குக் கொடுக்க வைத்திருந்த 500 புடவைகள் பறிமுதல்!