சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதனைத்தொடர்ந்து சுங்க இலாகா அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கொழும்புவிலிருந்து வந்த விமானத்தில் பயணம்செய்த இலங்கையைச் சோ்ந்த பெண்களான பாத்திமா ரீயானா (31), பாத்திமா ஜைனப் (29) ஆகியோரை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த சுங்கத் துறை அலுவலர்கள் இருவரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனர்.
இதில், அவர்களது உள்ளாடைக்குள் மறைத்து கடத்திவந்த 54 லட்சத்து 61 ஆயிரம் மதிப்புள்ள ஆயிரத்து 268 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த திருச்சியைச் சோ்ந்த முகமது ஜாகீா் (27) என்பவரிடம் நடத்திய சோதனையில், மின்சார கேபிள் வயருக்குள் தங்கக் கம்பிகளை மறைத்து கடத்திவந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து ஒன்பது லட்சத்து 95 ஆயிரம் மதிப்புள்ள 231 கிராம் தங்கம் பறிமுதல்செய்யப்பட்டது.
சென்னையிலிருந்து மலேசியாவிற்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.5.2 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலா் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்செய்யப்பட்டது. உள்ளாடைக்குள் வெளிநாட்டு பணக்கட்டுகளை மறைத்துவைத்து எடுத்துச்செல்ல முயன்ற புதுக்கோட்டையைச் சோ்ந்த நூா்முகமது (30) என்பவரை சுங்கத் துறை அலுவலர்கள் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் 64.56 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.5 கிலோ தங்கம், 5.2 லட்சம் ரூபாய் மதிப்புடைய அமெரிக்க டாலா் உள்ளிட்டவை பறிமுதல்செய்யப்பட்டன. மேலும், இலங்கை பெண்கள் உள்பட நான்கு பேரை கைதுசெய்த சுங்கத் துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: '8 தோட்டாக்கள்' போல் வித்தியாசமாக இருக்கும் அதர்வாவின் 'குருதி ஆட்டம்'