சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது கொழும்பிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த திருச்சியைச் சேர்ந்த சாபூரம்மாள் (31), சமீரா (37), சகீலா பானு (41) ஆகிய மூவரையும் சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.
அப்போது முன்னுக்குபின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தபோது எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதில் மூன்று பேரிடமிருந்தும் ரூ. 46 லட்சத்தி 65 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதேபோல மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த தாஜுதீன் (28) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இவரிடமிருந்து ரூ. 16 லட்சத்தி 35 ஆயிரம் மதிப்புள்ள 401 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
ஒரே நாளில் நான்கு பேரிடம்மிருந்து ரூ. 63 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 501 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இவர்கள் யாருக்காக கடத்தி வந்தனர், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.