ஓமன் நாட்டுத் தலைநகா் மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில், வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது சென்னையைச்சேர்ந்த இரண்டு ஆண் பயணிகள் மீது சுங்க அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார். இதையடுத்து சுங்க அலுவலர்கள் அவர்கள் இருவரின் உடைமைகளை முழுமையாக சோதித்தனர். உடைமைகளில் ஏதும் சிக்கவில்லை. ஆனாலும், அவர்கள் கொண்டு வந்திருந்த டிராலி டைப் சூட்கேஸ்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு பேருடைய சூட்கேஸ்களையும் ஆய்வு செய்தனர்.
அந்த சூட்கேஸ்களை சுற்றி, அமைக்கப்பட்டுள்ள ரப்பர் பீல்டிங்கை பிரித்துப் பார்த்தனர். அதற்குள் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இரண்டு பேருடைய சூட்கேஷ்களிலும் இருந்து மொத்தம் 3 கிலோ தங்க ஸ்ப்ரிங்குகளை சுங்க அலுவலர்கள் கண்டுபிடித்து எடுத்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 1.33 கோடி எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சுங்க அலுவலர்கள் சென்னை பயணிகள் இருவரையும் கைது செய்தனர்.
அத்தோடு தங்க ஸ்ப்ரிங்குகளையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இரண்டு பயணிகளிடமும் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இந்த தங்க ஸ்ப்ரிங்குகளை யாருக்காக கடத்தி வருகின்றனர். இவர்களை கடத்தலுக்கு அனுப்பியவா்கள் யார்? இவர்களுக்கும் சர்வதேச தங்க கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு இதேபோல் சூட்கேஸ் ரப்பர் பீல்டிங்கில் மறைத்து வைத்திருந்த தங்க ஸ்ப்ரிங்குகளையும் கைப்பற்றி, ஒருவரை கைது செய்தனர். தற்போது புது விதமாக, தங்கத்தை ஸ்ப்ரிங்குகளாக கடத்துவதில், கடத்தல் ஆசாமிகள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களை கடத்தினாரா வடமாநில இளைஞர்? - மாணவரின் தந்தை கைது