சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்மாள் (65). இவர் அதே பகுதியில் பெட்டிக் கடை நடத்திவருகிறார்.
இவர் வைத்திருந்த 5.5 சவரன் தங்கச் சங்கிலியை அவரது மகள் கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றிற்காக வாங்கிச் சென்றுள்ளார். பின்னர் கடையில் இருந்த தனது தாயிடம் 5 சவரன் சங்கிலியைக் கொடுத்துள்ளார்.
இந்த நகையை மூதாட்டி வாங்கி கல்லாப் பெட்டியில் வைத்துள்ளார். இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடைக்கு குளிர்பானம் வாங்க வருவதுபோல் நாடகமாடியுள்ளார்.
தனக்கு 5 குளிர்பானங்கள் வேண்டும் என்றும் உள்ளே சென்று எடுத்துவாருங்கள் என்றும் கூறி பொன்னம்மாளை திசைத் திருப்பி கிடைத்த சில நிமிட அவகாசத்தில் கல்லாப் பெட்டியில் இருந்த பணத்தையும், 5.5 சவரன் நகையையும் திருடிச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் பதிவைக் கொண்டு காவல் துறையினர் தப்பியோடிய அடையாளம் தெரியாத நபரைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:ஓடும் பேருந்தில் நகை பறிப்பு: வெளுத்து வாங்கிய பொதுமக்கள்!