சென்னை: கார் பந்தயத்திற்கான தொகையை மழை நிவாரணத்திற்கு செலவிடுங்கள் எனவும், மழை வெள்ளத்தில் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள், வாகனங்கள் சேதத்தை கணக்கிட்டு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் ஜி.கே.வாசன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தாம்பரம் முகாம்பிகை நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று (டிச.8) வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டை மழை வெள்ளம் ஏற்படாது, பல பணிகள் 4 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்பட்டதாக நிறைய விளம்பர செய்திகளை அமைச்சர்களும், அரசு தெரிவித்து வந்தது.
ஆனால், அரசு செய்துள்ளஉட்கட்டமைப்பு பணிக்கான செலவு எந்த பயனும் அளிக்கவில்லை என்பது இந்த மழை வெள்ளம் தெளிவாக காட்டுகிறது. மழை நின்ற பிறகும் கூட பல நாட்கள் தண்ணீர் தேங்கி இருப்பதை நம்மால் பார்க்க முடியும். இது மக்களின் மீது உள்ள அக்கரையின்மை காணமுடிகிறது. அரசின் மீதான மக்களின் கோவம் நியாமான கோவமாக பார்க்கப்முடிகிறது.
சென்னை, தாம்பரம் மற்றும் புறநகர் பகுதியில் தண்ணீர் புகுந்ததால் மின்சாதன பொருட்கள், வாகனங்கள் சேதம் ஆகியுள்ளது. தமிழ்நாடு அரசு சேதத்தை ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும். புதிய கட்டிடம் கட்டும்போது 100 சதவீத கோட்பாடுகளை கடைப்பிடிக்க அரசும், அதிகாரிகளும் முயல வேண்டும்.
வரும் நாட்களில் இதுபோன்ற தவறான செயல்பாடுகளால் மக்கள் பாதிக்கக்கூடாது. பள்ளிகள் திறக்கப்படும் போது கட்டமைப்பினை சரிசெய்து ஆய்வு செய்து பள்ளிகள் திறக்கபட வேண்டும். பால் பாக்கெட் கூட மக்களுக்கு கிடைக்கவில்லை என்ற குற்றசாட்டு தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் கூட இது போன்ற அசாதாரண சூழல் இல்லை.
இந்த மழை ஆட்சியாளருக்கு கடும் எச்சரிக்கை மணி விடுத்துள்ளது. சென்னையில் பார்முலா 4 கார் பந்தயத்திற்கு ஒதுக்கப்பட்ட 2 ஆயிரம் கோடி திரும்பப் பெற வேண்டும் எனவும், கார் பந்தயத்தை ரத்து செய்து விட்டு அந்த தொகையை, மழை நிவாரணத்திற்கு பயன்படுத்த வேண்டும்" என்று ஜி.கேவாசன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளில் திமுகவினர் இல்லை" - பாஜக தலைவர் அண்ணாமலை சாடல்