சென்னை - திருவல்லிக்கேணி பக்கீர் ஷாகிப் பகுதியைச் சார்ந்தவர் சங்கர்(51). இவர் பூக்கடைப் பகுதியில் உள்ள கடைகளில் காய்கறிகளை மொத்தமாக வாங்கி, தனது மூன்று சக்கர வாகனத்தில் வைத்து தெரு தெருவாக சென்று வியாபாரம் செய்பவர்.
முழு ஊரடங்கிலும் பூக்கடைப் பகுதியில் மலிவான விலைக்கு காய்கறிகள் கிடைக்கும் என்பதால், சங்கர் அதிகாலையிலேயே காய்கறிகளை வாங்க, தனது மூன்று சக்கர வாகனங்களில் சென்றுள்ளார்.
பாரி முனை அரசு பல் மருத்துவமனை அருகில் சென்று இருக்கும்போது, இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 6 பேர் இவரை வழிமறித்தனர். பின்னர் அவரைத் தாக்கி அவரிடமிருந்து ரூபாய் 2,200 ரொக்கப்பணம் மற்றும் அவரது செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து உடனடியாக சங்கர் அருகிலுள்ள பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரினை ஏற்ற காவலர்கள், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவியை ஆராய்ந்தனர். ஆராய்ந்த பிறகு சங்கரிடம் வழிப்பறி செய்தவர்கள் அனைவரும் இளம் வயதினர் எனத் தெரியவந்துள்ளது. எனவே, அவர்களைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
முழு ஊரடங்கு காலத்திலும் இவ்வாறு வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதையும் படிங்க: பணம் பெற்று மாவட்டத்திற்குள் வாகனங்களை அனுமதித்த விவகாரம்: காவலர்களிடம் விசாரணை