சென்னை : பத்திரிகையாளர் மன்றத்தில் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தற்போது தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி தட்டுபாட்டை போக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசு எந்த விதமான பாகுபாடின்றி தடுப்பூசியை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும்.
கரோனா இரண்டாம் அலைக்கு ஒன்றிய அரசு தான் காரணம்
கரோனா இரண்டாம் அலை இந்த அளவிற்கு பரவியதற்கு ஒன்றிய அரசுதான் காரணம். கரோனாவை முறையாக கட்டுப்படுத்த முடியாததால் சுகாதாரத் துறை அமைச்சர், இணை அமைச்சரை ராஜினாமா செய்ய வைத்துள்ளது. ஆனால் அதற்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டிய பிரதமர் அதே பதவியில் நீடிக்கிறார்.
முறையாக மருத்துவ ஆராய்ச்சி செய்வதில்லை
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி செய்யும் தொழிற்சாலை செயல்பட உடனடியாக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் 798 மருத்துவர்கள் கரோனாவால் உயிரிழந்துள்ளது வருத்தமளிக்கிறது. மருத்துவ ஆராய்ச்சியை துரிதப்படுத்த வேண்டும். இந்தியாவில் முறையாக மருத்துவ ஆராய்ச்சி செய்வதில்லை.
கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. அதனை வழங்க ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் வேகமாக பரவிவரும் டெங்கு
தமிழ்நாட்டில் வேகமாக டெங்கு பரவி வருவதால் தமிழ்நாடு அரசு கரோனா தடுப்பு பணியில் மட்டும் கவனம் செலுத்தாமல் டெங்கு பரவலை தடுக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். டெங்குவை பரப்பும் அதே ஏடிஸ் கொசுவால் பரவும் ஜிகா வைரஸை தடுக்க கொசு ஒழிப்பை தீவிரபடுத்த வேண்டும்.
நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும்
குறிப்பாக பருவகால நோய்களை எதிர்கொள்ள அந்த காலத்திற்கு மட்டும் தேவையான ஊழியர்களை தேர்வு செய்து பணி வழங்காமல் நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: