ரயில்வே ஊழியர்களுக்குப் பணிக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்தது தொடர்பான கூட்டத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கலந்துகொண்டார்.
அப்போது ஜான் தாமஸ் கூறியதாவது, "கெசட்டட் அலுவலர்கள் அல்லாத மற்ற ரயில்வே ஊழியர்களுக்கு பணிக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்கும் அமைச்சரவையின் முடிவால் 72 ஆயிரத்து 241 நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் ஆர்.பி.எஃப். (RPF) ஊழியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் இடம்பெற மாட்டார்கள்.
அக்டோபர் 15ஆம் தேதி இந்த ஊக்கத் தொகையை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதற்காக 130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலும், கடந்த நிதியாண்டில் தென்னக ரயில்வேயின் செயல்பாடு சிறப்பானதாக அமைந்துள்ளது.
தென்னக ரயில்வே ரயில்கள் உரிய நேரத்திற்கு ரயில் நிலையங்களிலிருந்து புறப்பட்டுச் செல்லும் இடத்திற்கு உரிய நேரத்தில் செல்வது அதிகரித்துள்ளது. அதாவது 93 விழுக்காடு உயர்வு கண்டுள்ளது.
2021 நிதியாண்டில் ரயில் சரக்குப் போக்குவரத்து 12 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதன் மூலம் தென்னக ரயில்வேயின் வருவாய் 25 விழுக்காடு அதிகரித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் பாராட்டு...