சென்னை பாடியில் பாஜக விவசாய அணி சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் 2000 கேஸ் பலூன்கள் பறக்கவிட திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிகழ்ச்சிக்கு வருகை தந்த விவசாய அணி துணை தலைவர் முத்துராமனை வரவேற்று பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு தீப்பொறி பலூன் மீது பட்டத்தில் நிர்வாகிகள் கையில் வைத்திருந்த, சுமாராக 500 பலூன்கள் மிகுந்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில், அருகில் நின்றுகொண்டிருந்த சிறுவர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயம் ஏற்பட்டது. காயம் ஏற்பட்ட அனைவருக்கும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கொரட்டூர் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி நடத்த எந்த ஒரு அனுமதியும் காவல் நிலையத்தில் பெறவில்லை எனவும், 144 தடை அமலில் உள்ள நிலையில் அனுமதி பெறாமல் ஆட்களை கூட்டி நிகழ்ச்சி நடத்தியது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயன்படுத்தியது போன்ற பிரிவில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பிரபாகரன் மற்றும் சிறப்பு விருந்தினராக வந்த மாநில விவசாய அணி துணை தலைவர் முத்துராமன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:லாரியில் சமையல் செய்தபோது, சிலிண்டர் வெடித்து விபத்து!