சென்னை: வில்லிவாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியினரைக் கத்தி முனையில் கட்டிப்போட்டு 70 சவரன் தங்க நகை மற்றும் 3.5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை.
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 2வது பிரதான சாலையில் வசித்திருப்பவர் சோழன் (66) இவர் கட்டிட மேஸ்திரி ஆக பணியாற்றி வருகிறார். இவருக்கு வனஜா என்கிற மனைவியும், இரண்டு மகன் ஒரு மகளும் உள்ளனர். இரண்டு மகன்கள் மற்றும் மகள் மூவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சோழன் அவரது மனைவி வனஜா உடன் வில்லிவாக்கம் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று (செப் 22) இரவு வழக்கம்போல் இரவு சாப்பிட்டுவிட்டு இருவரும் வீட்டைப் பூட்டி விட்டு படுக்கை அறைக்குத் தூங்கச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், அதிகாலை 3 மணி அளவில் யாரோ வீட்டின் கதவைத் தட்டி உள்ளனர். இதனால் வனஜா வீட்டின் கதவைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது கருப்பு முகமூடியை அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.
இதையடுத்து மர்மநபர்கள் கத்தியைக் காட்டி சோழன் மற்றும் அவரது மனைவியின் மிரட்டியுள்ளனர்
வீட்டின் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் வனிதா கழுத்தில், காதில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, தங்கக் கம்மல் உள்ளிட்ட 70 சவரன் தங்க நகைகளும் வீட்டில் வைத்திருந்த 3.50 லட்சம் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளை அடித்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: வெளிநாட்டுத் தங்க கட்டிகள் குறைந்த விலைக்கு விற்பனை.. மோசடி கும்பல் சிக்கியது எப்படி?
மேலும் வயதான தம்பதியினர் இருவரின் கை, கால்கள் மற்றும் வாயைத் துணி வைத்துக் கட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.இதையடுத்து விடியற்காலை 6 மணி அளவில் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது இருவரின் கை கால்கள் துணியால் கட்ட பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு நகை மற்றும் பணத்தைத் திருடர்கள் திருடி சென்றதைக் கண்டு அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.பின்னர் இது குறித்து உடனடியாக வில்லிவாக்கம் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற வில்லிவாக்கம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மோப்ப நாயை வைத்தும் சோதனை செய்தும், தடயவியல் நிபுணர்களையும் வர வைத்து தடயங்களையும் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி முகமூடி அணிந்து கொள்ளையடித்த கும்பலைக் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாலையில் சென்னையில் முகமூடி அணிந்து கத்தி முனையில் 70 சவரன் தங்க நகைகள் கொள்ளையடித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: திருமணத்திற்கு மீறிய உறவால் நிகழ்ந்த கொலை.. மாமியார் வீட்டு முன் தலையை வீசிய கொடூரம்!