சென்னை: சென்னை தியாகராய நகர் ஆர்பி கார்டன் பகுதியை சேர்ந்த முத்துகுமார் (42) என்பவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று(மே.3) இரவு முத்துகுமார் தனது பெண் தோழியுடன் பேசி கொண்டு கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பிரதான சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், முத்துகுமாரை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரது செல்போனை பறிக்க முயன்றனர். முத்துகுமார் செல்போனை தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், கத்தியால் முத்துகுமாரின் தலையில் வெட்டி விட்டு, அவரது செல்போன் மற்றும் உடனிருந்த பெண்மணியின் செல்போனையும் பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டது.
இதையடுத்து முத்துக்குமாரின் தோழி உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததார். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்த பாண்டிபஜார் போலீசார், காயமடைந்த முத்துகுமாரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனிடையே அதே வழிப்பறி கும்பல் இரவு 11.30 மணியளவில் கோடம்பாக்கம் காமராஜர் காலனியில் டிபன் கடை நடத்தி வரும் மாரியம்மாள்(50) என்பவரிடம் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். மாரியம்மாள் மாமூல் தர மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து 1,000 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து மாரியம்மாள் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த இரண்டு வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய வழிப்பறி கும்பலை தேடி வருகின்றனர். மேலும், இந்த கும்பல் வேறு ஏதாவது இடத்தில் கைவரிசையை காட்டியுள்ளதா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.