சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் இந்து அமைப்பினர், பொதுமக்கள் மற்றும் மற்ற ஆன்மிக அமைப்பைச் சார்ந்தவர்கள் என பொது இடங்களில் 1.50 லட்சத்துக்குm மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதில் சென்னையில் மட்டும் 5 ஆயிரத்துக்குm மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.
இவற்றில் 1,500 சிலைகள் பெரிய சிலைகளாகும். ஆவடியில் 204, தாம்பரத்தில் 425 பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. நேற்று (செப்.22) முதல் தமிழகத்தில் ஊட்டி, சேலம், திருச்சி, கோவை, திருப்பூர், நாமக்கல், மதுரை, நாகை உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் நாளை விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சிலை ஊர்வலமானது, சென்னையில் குறிப்பிட்ட சாலைகளில் மட்டும் நடைபெறும் என சென்னை காவல் துறை சார்பில் தெரிவித்து இருந்தது.
மேலும் கடலில் கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரைப் பகுதிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கடற்கரை பகுதி தற்போது முழுவதும் காவல் துறை, தீயனைப்புத் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி என பல்வேறு துறை இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டினப்பாக்கம் கடற்கரை: அயனாவரம், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், புதுப்பேட்டை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், சவுக்கார்பேட்டை, கோயம்பேடு, தி.நகர், வடபழனி, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கொளத்தூர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை, பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல், கடலில் கரைப்பதற்காக வாகனங்களில் எடுத்து வந்த விநாயகர் சிலைகளை கடலுக்கு கொண்டு செல்ல ட்ராலிகள், பிரமாண்ட சிலைகளை தூக்குவதற்கு கிரேன்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. மேலும், கடலில் யாரும் இறங்காத வண்ணம் முழுவதும் கட்டைகள் கட்டப்பட்டு தடுப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
சிலைகள் கரைக்கும் பிற இடங்கள்: அடையாறு, நங்கநல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதியில் வைக்கப்பட்ட சிலைகள் நீலாங்கரை கடற்கரையிலும், தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, மாதவரம் உள்ளிட்ட பகுதிகள் உள்ள சிலைகள் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியிலும், திருவொற்றியூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்ட்டுள்ளது. மேலும், சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலைகளை கரைக்க விதிமுறைகள்: சிலைகள் கரைக்கப்படுவதற்கு முன்பு சிலைகளில் அலங்கரிக்கப்பட்ட துணிகள், பூமாலைகள், அலங்கார தோரணங்கள், இலைகள், செயற்கை ஆபரணங்கள் போன்றவை அகற்றப்பட வேண்டும். அவ்வாறு அகற்றப்பட்ட சிலைகள் மட்டுமே பாதுகாப்பான முறையில் குறிப்பிடப்பட்ட இடத்தில் கரைக்க வேண்டும்.
சிலைகள் கரைக்கப்படும் இடத்தில் சேகரிக்கப்படும் துணிகள், பூமாலைகள், இலைகள், அலங்காரப் பொருட்கள் போன்றவை முறையாக சேகரிக்கப்பட்டு, 24 மணிநேரத்திற்குள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் அகற்றப்பட்டு, திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கையாளப்பட வேண்டும்.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி வகைகள் இருப்பின், அதனை ஆதரவற்றவர்கள் இல்லங்களுக்கு மறுபயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கலாம். மூங்கில் மற்றும் மரக்கட்டைகள் போன்ற பொருட்கள் இருப்பின், அதனையும் மறுபயன்பாட்டிற்கு அனுப்பலாம். சிலைகளிலிருந்து அகற்றப்பட்ட துணிகள், பூமாலைகள், அலங்காரத் தோரணங்கள், மூங்கில்கள் போன்றவற்றை நீர்நிலைகளின் கரை ஓரங்களில் கொட்டி, தீயிட்டு எரிப்பது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது போன்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.
போலீஸ் பாதுகாப்பு: விநாயகர் சிலை ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீஸார் செய்துள்ளனர். அதன்படி, ஒவ்வொரு விநாயகர் சிலையும் போலீசார் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட உள்ளது. அந்த வகையில், சென்னையில் 18,500 போலீசார், ஆவடியில் 2,080 போலீசார், தாம்பரத்தில் 1,500 போலீசார் என மொத்தமாக 22,080 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிலைகள் கரைக்கப்படும் கடற்கரை பகுதியில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், படகுகள், லைஃப் ஜாக்கெட் மற்றும் பல்வேறு வகைகளில் அசம்பாவித சம்பவங்களைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
சிலைகள் கொண்டு செல்லும் வழிகள்:
- ஜிஎஸ்டி ரோட்டில் உள்ள பல்லாவரம் வெட்டர் லைனில் ஒன்று சேர்ந்து அரைவா பாயிண்ட் வழியாக சென்னை மாநகர காவல் எல்லைக்குள் கொண்டு செல்லப்படும்
- ஜிஎஸ்டி ரோட்டில் தாம்பரம் வள்ளுவர் குருகுலம் அருகே U Turn செய்து தாம்பரம் மேம்பாலம் வழியாக மேடவாக்கத்தில் ஒன்று சேர்ந்து, வேளச்சேரி மெயின் ரோடு கைவேலி சந்திப்பு வழியாக சென்னை மாநகர காவல் எல்லைக்குள் கொண்டு செல்லப்படும்.
- வண்டலூர் கேளம்பாக்கம் ரோடு வழியாக தாம்பரம் காவல் எல்லைக்கு உட்பட்ட கோவளம் குன்றுக்காடு குப்பத்தில் உள்ள கடற்கரைக்கு விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்படும்.
- மறைமலைநகர் மற்றும் கூடுவாஞ்சேரி பகுதிகளில் இருந்து வரும் சிலைகள், ஜிஎஸ்டி சாலையில் உள்ள மகேந்திரா சிட்டி வழியாக செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்குள் கொண்டு செல்லப்படும்.
- வேளச்சேரி மெயின் ரோடு மேடவாக்கத்தில் ஒன்று சேர்ந்து சிலைகள் ஈச்சங்காடு சந்திப்பு ரோடு ரேடியல் ரோடு காமாட்சி மருத்துவமனை சந்திப்பு கைவேலி சந்திப்பு வழியாக சென்னை மாநகர காவல் எல்லைக்குள் கொண்டு செல்லப்படும்
- கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி பகுதியில் உள்ள சிலைகள் ஓஎம்ஆர் ராஜீவ் காந்தி நகர் சிக்னல் வழியாக சென்னை மாநகர காவல் எல்லைக்குள் கொண்டுசெல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.