சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் படுகாயம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் சிகிச்சை உதவிக்காக சென்னை வருபவர்களுக்கு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 40 படுக்கை கொண்ட சிறப்பு வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த சிறப்பு வார்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, “ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக தமிழ்நாட்டை சேர்ந்த உயிரிழந்த பயணிகள் குறித்தும், காயம் அடைந்த பயணிகள் குறித்தும் ஆய்வு செய்ய அமைச்சர்கள் மற்றும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விபத்து நடந்த பகுதிக்கு சென்றுள்ளார்கள்.
ஒடிசா அரசு அதிகாரிகளும், தமிழ்நாட்டில் இருந்து சென்ற அரசு அதிகாரிகளும் எங்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கிறார்கள். எங்களுக்கு வரக்கூடிய தகவல்கள் அடிப்படையில், நான் ரயில்வே கோட்ட மேலாளருடன் பேசியிருக்கிறேன். அங்கிருந்து விபத்தால் காயமடைந்த மற்றும் அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்காக ரயில்வே துறை மூலம் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் மூலமாக நாளை அதிகாலை அல்லது காலை 9 மணிக்கு சென்னை வர இருக்கிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 6 மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. 200 படுக்கைகள் சிறு காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ளது. இதை தவிர ஓமந்தூரார், ராயப்பேட்டை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் தேவைப்பட்டால் அதற்கான ஏற்பாடுகளும் தயாராக உள்ளது.
ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட அல்லது காயமடைந்த பயணிகள் சிறப்பு ரயிலில் வரும் போது அவர்களுக்கு ரயிலில் உதவுவதற்கு ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் பயண நேரத்தில் தேவையான சிகிச்சை வழங்குவதற்கு மருத்துவ குழுக்களும் இருப்பார்கள். தற்போது இந்த ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 100 மருத்துவர்கள், 40 படுக்கைகள் (ஐசியு பிரிவில்) தயார் நிலையில் உள்ளது. தேவைப்பட்டால் பிரேத பரிசோதனை செய்து உடலை பதப்படுத்துவதற்கு நான்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏற்பாடுகள் செய்து தரப்படும்.
விமானத்தில் வரும் பயணிகள் குறித்து பொதுத்துறை மற்றும் அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பயணிகளைக் கொண்டு வரவும், சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது, தேவைப்பட்டால் மற்ற மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களையும் பயன்படுத்த உள்ளோம்” என கூறினார்.
இதையும் படிங்க: சென்னையில் இருந்து விபத்து நடந்த இடத்துக்கு ரயில் இயக்கம் - ரயில்வே எஸ்பி பொன்ராமு