சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது படிப்படியாக நோய்த் தொற்று குறைவதால், பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று, அனைத்து தரப்பு கருத்துகளையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் வரும் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தூய்மை பணி
இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், உள்ளாட்சி அமைப்புகளைத் தொடர்புகொண்டு கிருமி நாசினி மருந்து தெளித்தல், தேவையற்ற முட்புதர்களை அகற்றுதல் போன்ற பணிகளையும் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டிலுள்ள 6,177 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்காக பள்ளிக் கல்வித் துறை நிதியினை ஒதுக்கீடு செய்து பள்ளிகளுக்கு அனுப்பி உள்ளது.
தமிழ்நாட்டில் 30 மாணவர்கள் வரையில் 16 பள்ளிகளும், 100 மாணவர்களுக்குள் 613 பள்ளிகளும், 250 மாணவர்களுக்குள் 2279 மாணவர்களும், 1000 மாணவர்களுக்குள் 2902 பள்ளிகளும், 1000 மாணவர்களுக்குள் 367 பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது.
வழிமுறைகள்
தற்போது அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளிகளில் முன் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ஒவ்வொரு பள்ளிக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிவறைகளை தூய்மை செய்திட வேண்டும் என அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு கழிவறைகள், கை கழுவும் வசதி, பாதுகாப்பான குடிநீர் வழங்கிட வேண்டும் எனவும், பள்ளி வளாகத்தில் சோப்பு, கிருமி நாசினி, துப்புரவு செய்ய பயன்படும் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
நிதி ஒதுக்கீடு
மாணவர், மாணவிகள் தினசரி வரும் இடங்களான வகுப்பறைகள், கழிவறைகள் போன்ற இடங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்திகரிப்பு பணி செய்து பாதுகாப்பினை உறுதி செய்தல் வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது.
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தெர்மல் ஸ்கேனர் பழுதடைந்திருந்தால், புதிய கருவி வாங்க பள்ளி மானியத்தைப் பயன்படுத்தலாம் எனவும், பள்ளிக்கு வழங்கப்படும் மானித்தொகையில் 10 சதவீதம் சுகாதாரப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
பள்ளிகளை சுத்தமாக பராமரிக்க 30 மாணவர்களைக் கொண்ட பள்ளிகளுக்கு 1000 ரூபாயும், 100 மாணவர்களைக் கொண்ட பள்ளிகளுக்கு 2500 ரூபாயும், 250 மாணவர்களைக் கொண்ட பள்ளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும், 1000 மாணவர்களைக் கொண்ட பள்ளிகளுக்கு 7500 ரூபாயும், 1000 மாணவர்களுக்கு மேல் கொண்ட பள்ளிகளுக்கு 10,000 ரூபாயும் ஒதுக்கீடு செய்து அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க வேண்டும்'