சென்னை: ஏற்கனவே முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்கள், வீடுகளில் சோதனைகள் மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மீண்டும் புதிய வழக்கு ஒன்றினை எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் மீதும், அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பதிவு செய்துள்ளனர்.
விஜயபாஸ்கர் மீதான வழக்கு: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே மஞ்சம்காரணை வேலன் நகரில் ஐசரி கணேசுக்கு சொந்தமான மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 300 படுக்கைகளுடன் இரண்டு ஆண்டுகளாக அந்த மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது.
ஆனால் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக ஒரு மருத்துவச் சான்றிதழை விஜயபாஸ்கர் கொடுத்ததாகவும், அதில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில் இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமாக சென்னையில் உள்ள ஐந்து இடங்களிலும், சேலத்தில் மூன்று இடங்களிலும், தேனி, மதுரை, புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் தாம்பரம் ஆகிய 13 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் வேல்ஸ் மருத்துவக்கல்லூரி உரிமையாளர் ஐசரி கணேசன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் முறைகேடாக சான்றிதழ் பெற்ற திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் வேல்ஸ் மருத்துவக்கல்லூரியின் முதல்வர் சீனிவாசன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக நான்கு மருத்துவ பேராசிரியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் மீதும்,சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மனோகர், சுஜாதா மற்றும் வசந்தகுமார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு: தற்போது தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது கிராமப்புறங்களில் தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றுவதில் முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் முதல் தகவல் அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், இத்திட்டத்தினை அறிமுகப்படுத்தியபோது எஸ்.பி.வேலுமணி ஒரு குழுவை அமைத்து இந்த திட்டத்தினை செயல்படுத்தியதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் எல்இடி விளக்குகளை வாங்குவதற்கு எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாத நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்களை பெற்ற நிறுவனங்கள் அனைத்தும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உறவினர்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய நபர்களும் பினாமி நிறுவனங்களாகும். தமிழ்நாட்டில் உள்ள எட்டு லட்சம் தெருவிளக்குகளில் எல்இடி விளக்குகளாக மாற்றப்படுவதற்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் இத்திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், தனக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் முதல் தகவல் அறிக்கையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில் கோவை,சென்னை உள்ளிட்ட எஸ்பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு - எம்எல்ஏக்கள், தொண்டர்கள் கைது