சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆயிரம் ரூபாய்க்கு முழு உடற் பரிசோதனை திட்டம் , ரூ 2.50 கோடி மதிப்பில் மார்பகப் புற்றுநோயை கண்டறியும் நவீன கருவிகள், ரூ 25 லட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் ரூ 75 லட்சம் மதிப்பில் குளிரூட்டப்பட்ட நூலகம் ஆகியவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வடசென்னையில் வாழும் மக்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் தொழிலாளர்கள் அதிகம் வாழும் பகுதிகள் என்பதால் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முழு உடற்பரிசோதனை மையம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
தொடர்ந்து, “மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள், தைராய்டு நோய்கள், காது மற்றும் கண் பரிசோதனை உள்பட அனைத்துப் பரிசோதனைகளையும் ஆயிரம் ரூபாய்க்கு செய்து கொள்ளும் விதமாக இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் , பிரத்யேக மார்பக சிறப்பு பரிசோதனை கருவி மற்றும் மின் ஒலி இதய வரைவு எகோ கருவிகள் அமைக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
மேலும், 10 அறுவை சிகிச்சை அறைகளைக் கொண்ட அறுவை சிகிச்சை அரங்கம் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது எனவும் புற்றுநோய் மற்றும் நரம்பியல் பிரச்சினைகளால் ஏற்படும் வலியை போக்க வலி நிவாரண மையம் தொடங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
இதையும் படிங்க: வீட்டிலேயே ஸ்கேன் செய்து கருக்கலைப்பு: 7 பேர் கைது