கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், மாணவர்கள் பள்ளிக்கு வர இயலாத சூழ்நிலை உள்ளது. நடப்புக் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கற்றல் செயல்பாடு தடைபடாத வண்ணம் இணையவழி மூலம் பயிற்சி வழங்க சென்னை மாநகராட்சி கல்வித் துறை தீர்மானித்துள்ளது.
அதனைச் செயல்படுத்தும்விதமாக தொண்டு நிறுவனத்தின் மூலமாக நான்காயிரத்து 790 கைப்பேசிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதோடு, அதனைப் பெற்றோரின் மேற்பார்வையில் கையாளும்விதம் பற்றி அனைத்து அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

மேலும் 10, 12ஆம் வகுப்புக்கான “கற்றல் கற்பித்தல்” என்ற திட்டம் மாநகராட்சி சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், நடப்புக் கல்வியாண்டில் பயிலும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணையதளத்தின் வாயிலாக ஒவ்வொரு நாளும் ஆசிரியரைக் கொண்டு பாடத்திட்டம் போதிக்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு மாணவர்கள் வருகின்ற பொதுத்தேர்வை எதிர்கொள்வதற்கு ஏதுவாக சில வழிமுறைகளை அறிந்துகொள்ளும் வகையில் மூன்றாயிரத்து 500 மாணவர்களுக்கு மாநகராட்சி கல்வித் துறையால் இணையதள இணைப்பு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.