கரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே தங்கிவருகின்றனர். பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்துவருகின்றது. வெளியூர் செல்ல முடியாமல் தவிக்கும் மக்களுக்கு மதிய உணவை மத்திய காலனி பயிற்சி நிறுவனம் CFTI (கிண்டி) வழங்கிவருகிறது.
மத்திய அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டுவரும் மத்திய காலனி பயிற்சி நிறுவன இயக்குநர் முரளி உத்தரவின்பேரில், சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகிலுள்ள சாலையோர மக்கள், சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்துவரும் மக்களுக்கு தினந்தோறும் மதிய உணவை இலவசமாக வழங்கிவருகின்றனர்.
இங்கு வரும் மக்களுக்கு முதலில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, பின்பு அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. மேலும், அவர்களது உடல்நிலையில் பாதிப்பு இருந்தால் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கின்றனர். இந்த உணவு விநியோகம் மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 14ஆம் தேதிவரை நடைபெறும் என்று தெரிவித்தனர்.
மத்திய காலனி பயிற்சி நிறுவன விடுதியில் உள்ள சமையல் அறையில் உணவை தயார் செய்யும் சமையல் கலைஞர்கள் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னரே உணவு தயாரிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும், தினமும் 120 நபர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் மதிய உணவுடன் கூடிய சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறது. மருத்துவ சோதனையுடன் இலவச மதிய உணவு வழங்குவது, பொதுமக்களுக்கும் அரசுக்கும் செய்கின்ற சேவையாகவும் தேவையாகவும் இருக்கிறது.
இதையும் படிங்க: கரோனா விழிப்புணர்வு பாடல் எழுதிய ஆறாம் வகுப்பு மாணவி!